Published : 01 May 2025 12:49 AM
Last Updated : 01 May 2025 12:49 AM
புதுடெல்லி: பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை நேற்று மீண்டும் ஆலோசனை நடத்தியது. இதனிடையே, இந்திய எல்லையில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என பாகிஸ்தானில் பதற்றம் அதிகரித்துள்ளது.
கடந்த 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவம், அந்த நாட்டு உளவுத் துறைக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, பஹல்காம் தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இதனிடையே, பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை (சிசிஎஸ்) கூட்டம் கடந்த ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற்றது. இதில் பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைப்பது, விசா நிறுத்தம் உள்ளிட்ட சில முடிவுகள் எடுக்கப்பட்டன. இதையடுத்து, சிம்லா ஒப்பந்தம் ரத்து உள்ளிட்ட சில நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுத்தது.
இந்த சூழலில், பிரதமர் மோடி தலைமையில் நேற்று முன்தினம் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தலைமை தளபதி அனில் சவுகான், ராணுவ தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படை தளபதி தினேஷ் கே திரிபாதி, விமானப்படை தளபதி அமர் பிரீத் சிங் ஆகியோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு தக்க பதிலடி கொடுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. எந்த இடங்களில், எவ்வாறு தாக்குதல் நடத்துவது என்பது குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் முப்படைகளுக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவை (சிசிஎஸ்) கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்கு பதிலடி கொடுப்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்திய எல்லையில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவை தயார் நிலையில் உள்ளன. இதனால் இரு நாடுகளுக்கிடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியா எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என பாகிஸ்தானியர்கள் கருதுகின்றனர். இதனால் அந்நாட்டில் பதற்றம் நிலவுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT