கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து: 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு

கொல்கத்தா ஹோட்டலில் தீ விபத்து: 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழப்பு
Updated on
1 min read

கொல்கத்தா: மேற்கு வங்க தலைநகர் கொல்கத்தாவில் தனியார் ஹோட்டல் ஒன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 தமிழர்கள் உள்பட 14 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்துள்ளனர்.

கொல்கத்தாவின் மெச்சுவா என்ற பகுதியில் உள்ள புர்ராபசாரில் அமைந்துள்ள ரிதுராஜ் என்ற 6 மாடிகள் கொண்ட ஹோட்டலின் முதல் தளத்தில் நேற்றிவு 8.15 மணி அளவில் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது ஹோட்டலில் 42 அறைகளில் 88 பேர் இருந்துள்ளனர். சுமார் 60 ஊழியர்கள் பணியில் இருந்துள்ளனர்.

முதல் மாடியில் தீ விபத்து ஏற்பட்டதால் தீ அடுத்தடுத்த மாடிகளுக்கும் பரவியுள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்துள்ளது. இதில், 13 பேர் மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தனர். ஒருவர், மாடியில் இருந்து கீழே குதித்ததில் படுகாயம் அடைந்து உயிரிழந்தார்.

மூச்சுத்திணறல் காரணமாக உயிரிழந்தவர்களில் 2 குழந்தைகளும் அடக்கம். காயமடைந்த 13 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 12 பேர் டிஸ்சார்ஜ் ஆகி உள்ளனர். ஒருவர் மட்டும் தொடர் கண்காணிப்பில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

3 தமிழர்கள் உயிரிழப்பு: கொல்கத்தா தீ விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை அடுத்த ஜோதிவடத்தை சேர்ந்தவர் பிரபு (40). இவர் கற்றாழை மூலப்பொருட்களை கொண்டு பொருட்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறார். மனைவி மதுமிதா, மகள் தியா (10), மகன் ரிதன் (3). பிரபு அவர் மனைவி, குழந்தைகள், அவரது மாமனார் முத்துகிருஷ்ணன் (61) ஆகியோருடன் கொல்கத்தாவுக்கு சுற்றுலா சென்றிந்தார். விபத்தின் போது ஹோட்டல் அறையில் இருந்த முத்துகிருஷ்ணன், அவரது பேரக்குழந்தைகள் தியா, ரிதன் ஆகிய 3 பேரும் மூச்சுத்திணறி, உடல்கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இரவு உணவு வாங்குவதற்காக பிரபுவும் அவர் மனைவி மதுமிதாவும் வெளியே சென்றதால் உயிர் பிழைத்தனர்.

போலீஸ் விசாரணை: இந்த தீ விபத்து குறித்து செய்தியாளர்களிடம் பேசிய காவல்துறை ஆணையர் மனோஜ் குமார் வர்மா, “ரிதுராஜ் ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் மொத்தம் 14 பேர் உயிரிழந்துள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது. இது குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டுள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

உயிரிழந்தவர்களில்,8 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன என்றும், மீதமுள்ள உடல்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

கொல்கத்தா மாநகராட்சி மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம் மற்றும் அமைச்சர் சசி பஞ்சா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு மீட்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மேயர் ஃபிர்ஹாத் ஹக்கீம், “தடயவியல் சோதனை நடத்தப்படும் வரை தீ விபத்துக்கான உண்மையான காரணம் எங்களுக்குத் தெரியாது,” என்று குறிப்பிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in