Published : 30 Apr 2025 05:44 AM
Last Updated : 30 Apr 2025 05:44 AM
தனியார் பள்ளிக் கட்டணத்தை ஒழுங்குபடுத்தும் சட்ட மசோதாவுக்கு டெல்லி அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
டெல்லியில் கல்விக் கட்டணத்தை தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக உயர்த்துவதாக எழுந்த புகார்களை தொடர்ந்து கட்டண நிர்ணயத்தை ஒழுங்குபடுத்தவும் அதில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் புதிய சட்டம் கொண்டுவர டெல்லி அரசு முடிவு செய்தது. இது தொடர்பான சட்ட மசோதாவுக்கு முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான டெல்லி அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்தது.
இதுகுறித்து முதல்வர் ரேகா குப்தா கூறுகையில், “டெல்லி அரசு ஒரு துணிச்சலான மற்றும் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கை எடுத்துள்ளது. டெல்லியில் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் நடத்தும் 1,677 பள்ளிகளில் கட்டண நிர்ணய நடைமுறை மற்றும் வழிகாட்டுதலை இந்த சட்டம் அளிக்கும். அரசால் இதுபோன்ற ஒரு சட்டம் கொண்டு வரப்படுவது வரலாற்றில் இதுவே முதல்முறை” என்றார்.
கல்வி அமைச்சர் ஆசிஷ் சூட் கூறுகையில், “புதிய விதிகளை நடைமுறைப்படுத்த 3 குழுக்கள் அமைக்கப்படும். பள்ளிகளில் உள்ள கட்டமைப்பு வசதிகள் அடிப்படையில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்டணம் நிர்ணயிக்கப்படும். கட்டண நிர்ணய குழுவில் 3 ஆசிரியர்கள் மற்றும் 5 பெற்றோர்களும் இடம்பெறுவார்கள்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT