Published : 30 Apr 2025 12:34 AM
Last Updated : 30 Apr 2025 12:34 AM
நாட்டின் பாதுகாப்பு கருதி ‘பெகாசஸ்’ மென்பொருளை பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது என உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
இஸ்ரேலைச் சேர்ந்த சைபர் புலனாய்வு நிறுவனமான என்எஸ்ஓ-வின் ‘பெகாசஸ்’ என்ற உளவு மென்பொருளை பயன்படுத்தி இந்தியாவில் அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள், எதிர்க்கட்சித் தலைவர்களின் செல்போன்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாக கடந்த 2021-ம் ஆண்டு புகார் எழுந்தது.
சர்வதேச ஊடக கூட்டமைப்பு வெளியிட்ட செய்தியின் மூலம் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து மத்திய அரசு தங்கள் செல்போன்களை ஒட்டு கேட்பதாகக் கூறி எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டன.
மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்தப் புகார் குறித்து ஆராய, உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு தனது அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதை நீதிமன்றம் ஆய்வு செய்து வருகிறது.
இந்த வழக்கு நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
உளவு மென்பொருளை அரசு பயன்படுத்துவதில் என்ன தவறு உள்ளது? குறிப்பாக தீவிரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தினால் என்ன தவறு? தேசிய பாதுகாப்பு விவகாரத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது. உளவு மென்பொருள் வைத்திருப்பது தவறு அல்ல. அது யாருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது என்பதுதான் உண்மையான கேள்வி.
பெகாசஸ் மென்பொருள் தொடர்பான அறிக்கை நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மையை பாதிக்கக் கூடியதாக உள்ளது. எனவே, இதில் இடம்பெற்றுள்ள தகவலை பொதுவெளியில் வெளியிட முடியாது. ஆனால் தங்களுடைய செல்போன் ஒட்டு கேட்கப்பட்டுள்ளதா என்பதை அறிய விரும்பும் நபர்களுக்கு அதுபற்றி தெரிவிக்க முடியும். ஆம் தனிநபரின் அச்சம் நிவர்த்தி செய்யப்பட வேண்டும். ஆனால் அவற்றை தெருக்களில் நடத்தப்படும் விவாதத்துக்கான ஆவணமாக ஆக்க முடியாது.
எனினும், தொழில்நுட்பக் குழுவின் அறிக்கையை சம்பந்தப்பட்ட நபர்களுடன் எந்த அளவுக்கு பகிர்ந்து கொள்ளலாம் என்பது குறித்து பரிசீலித்து வருகிறோம். இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.
விசாரணையின்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், “அமெரிக்க நீதிமன்றத்தில் ஹேக்கிங் சம்பவங்களை வாட்ஸ்அப் நிறுவனமே முன்வந்து தெரிவித்துள்ளது. எனவே பெகாசஸ் ஒட்டு கேட்பு விவரங்களை வெளியிட வேண்டும்” என்றார்.
இதையடுத்து இந்த வழக்கு மீது இன்றும் விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT