“பஹல்காமில் நடந்தது மத ரீதியிலான தாக்குதல் தான்...” - காங். மாநில தலைவருக்கு கணவரை இழந்த பெண் பதில்

“பஹல்காமில் நடந்தது மத ரீதியிலான தாக்குதல் தான்...” - காங். மாநில தலைவருக்கு கணவரை இழந்த பெண் பதில்
Updated on
1 min read

மும்பை: "பஹல்காம் தாக்குதலில் பயங்கரவாதிகள் முஸ்லிம் அல்லாதவர்களைத்தான் குறி வைத்தனர், நாங்கள் அதைப் பார்த்தோம். எங்கள் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம். இதை அரசியலாக்க வேண்டாம்" என அந்தத் தாக்குதலில் கணவரை இழந்த பெண் வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் விஜய் வடெட்டிவார், “பயங்கரவாதிகள் மதத்தைக் கண்டறிந்து பின்னர் மக்களைக் கொன்றதாக சொல்லப்படுகிறது. யாரையாவது நெருங்கிச் சென்று அவர்களிடம் அது குறித்து கேட்கும் அளவுக்கு நேரம் இருக்கிறதா? இது மிகவும் சர்ச்சைக்குரியது. ஏனென்றால், சிலர் இதுபோன்ற விஷயங்கள் நடந்ததாகக் கூறுகிறார்கள், மற்றவர்கள் அதை மறுக்கிறார்கள். எனவே, நாம் அது குறித்து பேச வேண்டாம்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், இத்தகைய பேச்சுகள் மூலம் தங்கள் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம் என்றும், இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கணவரை இழந்த புனேவைச் சேர்ந்த பிரகதி ஜக்தலே என்பவர் தெரிவித்துள்ளார். பஹல்காம் தாக்குதலில் கொல்லப்பட்ட 26 பேரில், இவரின் கணவர் சந்தோஷ் ஜக்தேலேவும் ஒருவர். சம்பவம் நடந்தபோது அங்கே இருந்தவரான பிரகதி ஜக்தலேவிடம் இது தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழப்பினர்.

அதற்கு மிகுந்த வேதனையுடன் வேண்டுகோள் விடுத்தபடி பேசிய அவர், "தயவுசெய்து இந்தச் சம்பவத்தை அரசியலாக்காதீர்கள். எங்கள் உணர்ச்சிகளுடன் விளையாடாதீர்கள். நாங்கள் அங்கே இருந்தோம். பயங்கரவாதிகள் என்ன சொன்னார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். தாக்குதலின்போது அவர்கள் கூறியதை நாங்கள் ஏற்கெனவே பகிர்ந்துள்ளோம். நாங்கள் பயங்கரவாதத்தை அனுபவித்தோம். வெறுக்கத்தக்க வார்த்தைகளைக் கேட்டோம்.

மனிதாபிமான அடிப்படையில் அனைத்து அரசியல்வாதிகளையும் கேட்டுக்கொள்கிறேன். எங்கள் உணர்ச்சிகளுடன் விளையாட வேண்டாம். பயங்கரவாதிகள் முஸ்லிம் அல்லாதவர்களை அடையாளம் கண்டுகொண்ட பிறகே கொன்றார்கள். பயங்கரவாதத் தாக்குதல் எங்களை இன்னும் வேட்டையாடுகிறது. நான் கண்களை மூடும்போதெல்லாம், துப்பாக்கியை வைத்திருக்கும் ஒரு மனிதனைப் பார்க்கிறேன். என்னால் சரியாகத் தூங்க முடியவில்லை. அதிர்ச்சி மிகவும் ஆழமாக உள்ளது" என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in