Last Updated : 29 Apr, 2025 03:05 PM

4  

Published : 29 Apr 2025 03:05 PM
Last Updated : 29 Apr 2025 03:05 PM

மத்திய அமைச்சரவை நாளை கூடுகிறது: பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு முதன்முறை

புதுடெல்லி: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு முதல்முறையாக மத்திய அமைச்சரவை நாளை (ஏப்.30) காலை 11 மணிக்கு கூடுகிறது.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு கடந்த 23-ம் தேதி பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு (CCS) கூட்டம் மட்டுமே நடத்தப்பட்டது. இதில், பயங்கரவாத தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

மேலும், சிந்து நதிநீர்ப் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தப்படுகிறது. பஞ்சாப் மாநிலம் அட்டாரி கிராமத்தில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச்சாவடி உடனடியாக மூடப்படுகிறது. முறையான அங்கீகாரத்துடன் இந்த எல்லை வழியாக சென்றவர்களும், வந்தவர்களும் இந்த எல்லை வழியாக மே 1-ம் தேதிக்கு முன்பாக திரும்ப வேண்டும். சார்க் விசா விலக்கு திட்டத்தின் கீழ் பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்படமாட்டார்கள். பாகிஸ்தானியர்களுக்கு இதற்கு முன் வழங்கப்பட்ட சிறப்பு விசாக்கள் ரத்து செய்யப்படுகிறது. சிறப்பு விசா மூலம் இந்தியாவில் தற்போது இருக்கும் பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்துக்குள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும்’ என்ற 5 முக்கிய முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதையடுத்து 24-ம் தேதி இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ”பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு எடுத்த முடிவுகளின் தொடர்ச்சியாக, பாகிஸ்தானியர்களுக்கான விசா சேவைகளை உடனடியாக நிறுத்தி வைக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவால் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து செல்லுபடியாகும் விசாக்களும் ஏப்ரல் 27, 2025 முதல் ரத்து செய்யப்படுகின்றன. பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ விசாக்கள் ஏப்ரல் 29, 2025 வரை மட்டுமே செல்லுபடியாகும்.

தற்போது திருத்தப்பட்டபடி, இந்தியாவில் உள்ள அனைத்து பாகிஸ்தானியர்களும் விசா காலாவதியாகும் முன் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும். பாகிஸ்தானுக்கு பயணம் செய்வதைத் தவிர்க்க இந்தியர்கள் கடுமையாக அறிவுறுத்தப்படுகிறார்கள். தற்போது பாகிஸ்தானில் உள்ள இந்தியர்களும் விரைவில் இந்தியா திரும்ப வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.” என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு முதல் முறையாக மத்திய அமைச்சரவை நாளை காலை 11 மணிக்கு கூட இருக்கிறது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x