Published : 29 Apr 2025 06:56 AM
Last Updated : 29 Apr 2025 06:56 AM
புதுடெல்லி: ‘‘பாகிஸ்தானை சேர்ந்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், திருமணத்தின் மூலம் இந்தியாவுக்குள் வந்துள்ளனர். இதுபோன்ற தீவிரவாதத்தின் புதுமுகத்தை எதிர்த்து எப்படி போராட போகிறோம்?’’ என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே விமர்சித்துள்ளார்.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22-ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதையடுத்து, பாகிஸ்தானியர்களின் அனைத்து விதமான விசாக்களையும் மத்திய அரசு ரத்து செய்தது. அத்துடன் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவிட்டது.
இந்நிலையில், தீவிரவாதத்தின் புதுமுகமாக திருமணம் இருக்கிறது என்று பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் நிஷிகாந்த் கூறுகையில், ‘‘திருமணத்தின் மூலம் மட்டும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பாகிஸ்தான் பெண்கள் இந்தியாவுக்குள் வந்துள்ளனர். அவர்களுக்கு இன்னும் இந்திய குடியுரிமை வழங்கப்படவில்லை. இதுபோல் திருமணம் மூலம் இந்தியாவுக்குள் வரும் பாகிஸ்தான் பெண்களின் எண்ணிக்கை அதிகரிப்பது, தீவிரவாதத்தின் புதுமுகமாக தெரிகிறது. இதை எதிர்த்து நாம் எப்படி போராட போகிறோம். இந்த விஷயம் மிகவும் கவலை அளிக்கிறது’’ என்று விமர்சித்துள்ளார்.
இந்நிலையில், அட்டாரி எல்லையில் இந்திய அதிகாரி அருண்பால் நேற்று கூறியதாவது:பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட தூதரக, நீண்ட கால, அலுவல் ரீதியிலான விசாக்களை தவிர்த்து மற்ற சிறப்பு விசாக்கள், குறுகிய கால விசாக்கள் அனைத்தையும் மத்திய அரசு கடந்த 27-ம் தேதி ரத்து செய்தது. அதன்பின் கடந்த 3 நாட்களில் மட்டும் இந்தியாவில் இருந்து 537 பாகிஸ்தானியர்கள் வெளியேறி உள்ளனர். அதே கால கட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து இந்தியர்கள் 850 பேர் நாடு திரும்பி உள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 237 பாகிஸ்தானியர்கள் இந்தியாவில் இருந்து வெளியேறினர். 116 இந்தியர்கள் நாடு திரும்பி உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT