இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க முடிவு

இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்களுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்க முடிவு
Updated on
1 min read

மத்திய அரசு விதித்துள்ள குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இந்தியாவை விட்டு வெளியேறாத பாகிஸ்தானியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அவர்கள் கைது செய்யப்படுவதுடன் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 22-ம் தேதி ஜம்மு காஷ்மீரின் மினி சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் பைசரன் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் தொடர்புடைய தீவிரவாதிகள் ராணுவ உடையில் வந்து நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் சுற்றுலாப் பயணிகள்.

இந்த தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்களின் விசாக்களை மத்திய அரசு உடனடியாக ரத்து செய்தது. சார்க் விசா வைத்துள்ளவர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு ஏப்ரல் 26-ம் தேதியுடன் முடிவடைந்தது. மருத்துவ விசாவில் வந்தவர்கள் வெளியேறுவதற்கான காலக்கெடு இன்றுடன் (ஏப். 29) முடிவடைகிறது.

வருகை, வணிகம், திரைப்படம், பத்திரிகையாளர், போக்குவரத்து, மாநாடு, மலையேறுதல், மாணவர், பார்வையாளர், குழு சுற்றுலா, யாத்ரீகர் மற்றும் குழு யாத்திரை உள்ளிட்ட 12 பிரிவுகளில் விசாக்களை பெற்று இந்தியா வந்த பாகிஸ்தானியர்கள் அனைவரும் ஏப்ரல் 27-ம் தேதியுடன் அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் வெளியேறியிருக்க வேண்டும்.

காலக்கெடுவுக்கு பின்னரும் இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் அனைவரும் கைது செய்யப்படுவர். கடந்த ஏப்ரல் 4 -ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ள குடிவரவு மற்றும் வெளிநாட்டினர் சட்டம் 2025-ன் படி, அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்வதுடன் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது அதிகபட்சம் ரூ.3 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து தண்டனையாக பெற்றுத்தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in