Published : 29 Apr 2025 06:43 AM
Last Updated : 29 Apr 2025 06:43 AM
காஷ்மீருக்கு வருமாறு சுற்றுலா பயணிகளை அழைத்தேன். ஆனால் அவர்களை பத்திரமாக திருப்பி அனுப்ப முடியாமல் போய்விட்டது. மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை என்று முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
காஷ்மீர் சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முதல்வர் உமர் அப்துல்லா பேசியதாவது:
காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இந்த தாக்குதலில் சிலர் தந்தையை இழந்துள்ளனர். சிலர் மகனை இழந்துள்ளனர். இதில் அண்ணன், தம்பியை இழந்துள்ளனர்.
அண்மையில் திருமணமாகி தேனிலவுக்கு காஷ்மீர் வந்த கடற்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மனைவிக்கு நான் என்ன பதில் கூறுவேன்? 10 வயது சிறுவன் தனது கண் முன்னே தந்தையை இழந்துள்ளார். அந்த சிறுவனுக்கு என்னால் எப்படி ஆறுதல் கூற முடியும்?
பஹல்காமில் நடத்தப்பட்ட தாக்குதல், காஷ்மீர் மீது மட்டும் நடத்தப்பட்ட தாக்குதல் கிடையாது. கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என நாட்டின் அனைத்து பகுதிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஆகும். பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் உயிரிழந்துள்ளனர். கடந்த 21 ஆண்டுகளில் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும்.
காஷ்மீருக்கு வருமாறு சுற்றுலா பயணிகளுக்கு நாம் அழைப்பு விடுத்தோம். ஆனால் அவர்களை பத்திரமாக திருப்பி அனுப்ப முடியாமல் போய்விட்டது. மன்னிப்பு கேட்க என்னிடம் வார்த்தைகளே இல்லை. காஷ்மீரின் சட்டம், ஒழுங்கு, சுற்றுலா துறை எனது வசம் இருக்கிறது. சுற்றுலா பயணிகளை பாதுகாக்க நான் தவறிவிட்டேன். அதற்காக மிகுந்த வேதனை அடைகிறேன்.
நாங்கள் என்ன தவறு செய்தோம் என்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். அவர்களுக்கு என்ன பதில் கூறுவேன்? காஷ்மீருக்கு வருமாறு சுற்றுலா பயணிகளுக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம். அவர்களை வரவேற்பது, பாதுகாப்பது நமது கடமை ஆகும். தீவிரவாதத்தை காஷ்மீர் மக்கள் விரும்பவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு எதிராக ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களும் குரல் எழுப்பி வருகின்றனர். கடந்த காலங்களில் காஷ்மீர் பண்டிட்டுகள், சீக்கியர்களை குறிவைத்து தீவிரவாத தாக்குதல்கள் நடைபெற்றன. இதில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்காக இப்போதுவரை பரிதவிக்கிறேன்.
இந்த நேரத்தில் காஷ்மீர் மக்களுக்கு ஓர் அழைப்பு விடுக்கிறேன். தீவிரவாதத்துக்கு எதிராக கோஷமிடுங்கள், பதாகைகளை ஏந்துங்கள். நாம் ஒன்றிணைந்தால் தீவிரவாதத்தை தோற்கடிக்க முடியும்.
உலகின் பல்வேறு நாடுகளில் தீவிரவாத பிரச்சினை நீடிக்கிறது. தீவிரவாதத்தை முழுமையாக ஒழிக்க முடியாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். ஆனால் நம்மால் தீவிரவாதத்தை ஒடுக்க முடியும், கட்டுப்படுத்த முடியும். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தோருக்காகவும் தீவிரவாதத்துக்கு எதிராகவும் அனைத்து மசூதிகளிலும் மவுன அஞ்சலி அனுசரிக்க வேண்டும்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலின்போது சுற்றுலா பயணிகளை பாதுகாக்க சையது அடில் ஹூசைன் ஷா என்ற இளைஞர் மிகக் கடுமையாக போராடி உள்ளார். தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டபோது பலரும் தங்கள் உயிரை காப்பாற்ற ஓடியுள்ளனர். ஆனால் அந்த இளைஞர் ஓடி, ஒளியவில்லை. தீவிரவாதிகளுக்கு எதிராக போராடி உள்ளார். இந்த போராட்டத்தில் தனது இன்னுயிரை தியாகம் செய்துள்ளார்.
தாக்குதல் நடந்த இடத்தில் இருந்த உள்ளூர் மக்கள், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளில் சேர்த்து உள்ளனர். சுற்றுலா பயணிகளுக்கு உணவு, குடிநீர் வழங்கி உள்ளனர். உள்ளூர் கார் ஓட்டுநர்கள், சுற்றுலா பயணிகளை இலவசமாக அழைத்து சென்றுள்ளனர். ஓட்டல்களில் சுற்றுலா பயணிகள் இலவசமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். காஷ்மீருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு நாம் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். காஷ்மீரின் விருந்தோம்பலில் அவர்களை நெகிழ செய்ய வேண்டும்.
காஷ்மீரில் ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு மாநில அந்துஸ்து கோரி வருகினேன். ஆனால் இந்த துயரமான நேரத்தில் எனது கோரிக்கையை வலியுறுத்த மாட்டேன். காஷ்மீரை கட்டி எழுப்ப மக்கள் ஒன்றிணைய வேண்டும். தீவிரவாதத்தை வேரறுக்க அனைவரும் உறுதியேற்க வேண்டும். காஷ்மீரில் தீவிரவாதத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் தொடங்கிவிட்டது.
பல்வேறு மாநிலங்களில் கல்வி பயிலும் காஷ்மீர் மாணவ, மாணவிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அந்தந்த மாநில அரசுகள், காஷ்மீர் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டுகிறேன். இவ்வாறு முதல்வர் உமர் அப்துல்லா பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT