Published : 29 Apr 2025 06:39 AM
Last Updated : 29 Apr 2025 06:39 AM

பிளவுபடும் நிலையில் பாகிஸ்தான்; பலுசிஸ்தான் புதிய நாடாக உருவாகும்: கோவா முதல்வர் ஆருடம்

பாகிஸ்தான் இரண்டாக உடைந்து பலுசிஸ்தான் புதிய நாடாக உருவாகும் என்று கோவா முதல்வர் பிரமோத் சவந்த் ஆருடம் தெரிவித்துள்ளார்.

பாஜக தொண்டர்களிடம் நேற்று முன்தினம் உரையாற்றிய சாவந்த் இதுகுறித்து மேலும் கூறியதாவது:

பலுசிஸ்தான் சுந்திரத்தை நோக்கி தனது இறுதி முயற்சியை மேற்கொண்டு வரும் நிலையில், பாகிஸ்தான் இரண்டாகப் பிரியும் தருவாயில் உள்ளது. இதையடுத்து, பலுசிஸ்தான் புதிய நாடாக தன்னை விரைவில் அறிவித்துக் கொள்ளும் நிலை உள்ளது.

பிரிவினைக்குப் பிறகு முஸ்லிம்கள் இந்தியாவில் தங்கிவிட்டனர். அதிலிருந்து அவர்கள் மக்கள் தொகை கணிசமாக அதிகரித்து வருகிறது. ஆனால், இந்துக்கள் மக்கள் தொகை குறைந்து வருகிறது. அவர்களுடன் நமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் மதச்சார்பற்ற நாடு. இந்து, முஸ்லிம், கிறிஸ்துவர் என நாம் அனைவரும் சமூக ஒற்றுமையுடன், அமைதியான முறையில் இணைந்து வாழ்கிறோம்.

பாரதம் ஒற்றை நாடாக இருந்தது. ஆனால் பிரிவினைக்குப் பிறகு அது இந்தியா, பாகிஸ்தான் என ஆனது. 1971-ம் ஆண்டு பாகிஸ்தான் இரண்டாக உடைந்து புதிய நாடாக வங்கதேசம் பிறந்தது. இப்போது, பாகிஸ்தான் மேலும் இரண்டாக பிளவுபட்டு பலுசிஸ்தான் என்ற புதிய நாடு பிறக்க அதிக வாய்ப்புள்ளது.

பலுசிஸ்தான் பாகிஸ்தானின் மிகப்பெரிய மற்றும் பின்தங்கிய மாகாணமாக உள்ளது. அது இஸ்லாமாபாத்துடன் போரில் ஈடுபட்டுள்ளது. தங்களது பகுதிகள் கட்டாயப்படுத்தி இணைக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டை பலுசிஸ்தான் தொடர்ந்து கூறி வருகிறது.

இந்தியாவை 60 ஆண்டு காலம் ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்துக்கு எதிராக எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனால் பிரதமர் மோடி அப்படி இல்லை. அவர் தீவிரவாதத்தை சிறிதளவும் பொறுத்துக்கொள்ளமாட்டார். பஹல்காம் தாக்குதலையடுத்து பாகிஸ்தானியர் அனைவரையும் இங்கிருந்து வெளியேற உத்தரவிட்டுள்ளது உட்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளார். பாகிஸ்தான் தீவிரவாதத்தை நிறுத்தாதவரை அவர்களால் இந்தியாவுக்குள் நுழைய முடியாது.

ஜம்மு காஷ்மீரில் ஏப்ரல் 22-ம் தேதி நிகழ்த்தப்பட்ட கொடூர தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு 100 சதவீதம் பாகிஸ்தானை மோடி பழிதீர்ப்பார். இவ்வாறு பிரமோத் சாவந்த் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x