Last Updated : 28 Apr, 2025 12:28 PM

5  

Published : 28 Apr 2025 12:28 PM
Last Updated : 28 Apr 2025 12:28 PM

என்சிஇஆர்டி பாடநூலில் கும்பமேளா அத்தியாயங்கள் சேர்ப்பு, முகலாய வரலாறு நீக்கம்!

மகாகும்பமேளா | கோப்புப் படம்

புதுடெல்லி: என்சிஇஆர்டி பாடநூலில் மகாகும்பமேளா உள்ளிட்ட பல புதிய அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. பல வருடங்களாக பாடநூலில் இடம்பெற்ற முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்கள் வரலாறு நீக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழான என்சிஇஆர்டியில் நடப்பு கல்வி ஆண்டுக்கான 7-ம் வகுப்பு பாடநூலில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இது, பெரிய அளவிலான மறுசீரமைப்புகளை உள்ளடக்கிய புதிய பாடநூலாகக் கருதப்படுகிறது. இதில், பல புதிய அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டு ஏற்கெனவே இருந்தவை நீக்கப்பட்டுள்ளன. சமூக-பொருளாதாரப் பகுதியில் 'மேக் இன் இந்தியா', பேட்டி பச்சாவ் பேட்டி படாவ் (பெண் குழந்தையை காத்து வளர்ப்பது) அட்டல் டனல் போன்ற அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

வரலாற்று பாடங்களில் இந்திய வம்சங்கள், புவியியல் அம்சங்கள் மற்றும் மகாகும்பமேளா பற்றிய புதிய அத்தியாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில், சுமார் 65 கோடி மக்கள் வந்து புனித நீராடினர் என்ற குறிப்பு உள்ளது. இப் பாடப்பகுதியில் முன்பிருந்த முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தானியர்கள் பற்றியப் பாடங்கள் நீக்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை 2020 மற்றும் பள்ளிக் கல்விக்கான தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன.

சமூக அறிவியல் பாடநூலில் “சமூக ஆய்வு: இந்தியா மற்றும் அதற்கு அப்பால்” என்ற தலைப்பிலும் புதிய அத்தியாயங்கள் இணைக்கப்பட்டுள்ளன. சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் பண்டைய இந்தியாவின் சில வம்சங்கள் உள்ளன. இந்தியாவை ஆண்ட மகதம், மவுரியர்கள், ஷுங்காக்கள் மற்றும் சாதவாகனர்கள் உள்ளிட்டவை அதில் இடம்பெற்றுள்ளன. இப்பாடநூலின் மற்றொரு புதிய பதிப்பில், ‘பூமி எவ்வாறு புனிதமாகிறது’ என்ற அத்தியாயம் உள்ளது.

இஸ்லாம், கிறிஸ்தவம், யூத மதம், ஜோராஸ்ட்ரிய மதம், இந்து மதம், பௌத்தம் மற்றும் சீக்கியம் போன்றவை பற்றி இதில் உள்ளன. இந்தியா மற்றும் அதன் வெளியே உள்ள நாடுகளிலும் புனிதத்தலங்கள் மற்றும் புனித யாத்திரைகள் பற்றியும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த அத்தியாயத்தில் 12 ஜோதிர்லிங்கங்கள், சார்தாம் யாத்திரை மற்றும் சக்தி பீடங்கள் போன்றவை இடம்பெற்றுள்ளன. ’புனித புவியியல்’ என்ற அத்தியாயத்தில் இந்திய நதிகளின் சங்கமங்கள், மலைகள் மற்றும் காடுகள் போன்ற இடங்களின் விவரங்கள் உள்ளன.

பத்ரிநாத் மற்றும் அமர்நாத்தின் பனிக்கட்டி சிகரங்கள் முதல் கன்னியாகுமரியின் தெற்கு முனை வரையிலானப் புனித யாத்திரைகளும் உள்ளன. இந்த பாடநூலில், காலனித்துவ காலத்தில் சமத்துவமின்மைக்கு வழிவகுத்த வர்ண-ஜாதி முறையைப் பற்றியும் உள்ளது. என்சிஇஆர்டியின் 7-ம் வகுப்பு பாடநூலின் இரண்டாம் பகுதி அடுத்த சில மாதங்களில் வெளியிடப்பட உள்ளது.

வெளியாக உள்ள இந்த நூலில் முதல் நூலில் நீக்கப்பட்ட இடைக்கால இந்தியா மீண்டும் இடம்பெறுமா எனத் தெரியவில்லை. இதுபோல், இடைக்கால இந்தியாவின் ஆட்சியாளர்களான முகலாயர்கள் பாடங்கள் குறைப்பதும் நீக்குவதும் முதன்முறையல்ல. மேலும், தனிநபர்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை பறக்க அனுமதிக்கும் இயக்கம் குறித்த ஓர் அத்தியாயமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x