பஹல்காம் விவகாரம்: பிரதமர் மோடியுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு

அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடி | கோப்புப்படம்
அமைச்சர் ராஜ்நாத் சிங், பிரதமர் மோடி | கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (திங்கள்கிழமை) சந்தித்தார். இந்த சந்திப்பு பிரதமரின் இல்லத்தில் நடந்தது.

முன்னதாக, பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் பற்றி பாதுகாப்பு படைகளின் தலைவர் அணில் சவுகான் ராஜ்நாத் சிங்கிடம் நேற்று விளக்கியிருந்தார். இந்நிலையில், அதற்கு அடுத்தநாளில் பிரதமருடனான இச்சந்திப்பு நிகழ்ந்துள்ளது.

அதேபோல், பஹல்காம் தாக்குதல் பற்றி விவாதிக்க நாடாளுமன்ற வளாகத்தில் ராஜ்நாத் சிங் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்துக்கு மூன்று நாட்களுக்கு பின்பு இன்றைய சந்திப்பு நிகழ்வது குறிப்பிடத்தக்கது.

நடந்தது என்ன? ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் இருந்து 5 கி.மீ. தள்ளியிருக்கும் பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் கடந்த ஏப்.22-ம் தேதி நடத்திய கொடூரத்தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள். கடந்த 2019-ம் ஆண்டு புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் கொல்லப்பட்டதற்கு பின்பு நடந்தப்பட்ட மிகக் கொடூரமான தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது.

‘எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் தொடர்புகள்’ - இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் முகாமிட்டு தேசிய புலனாய்வு முகமை தாக்குதல் குறித்த ஆதாரங்களைத் தேடி வருகின்றனர். கூடுதலாக இந்திய ராணுவம் எச்சரிக்கப்பட்டு, பயங்கரவாதிகளை அழிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் தேடுதல் வேட்டைகள் நடத்தி வருகின்றனர்.

இந்தத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து, ஏப்.23-ம் தேதி பாதுகாப்பு அமைச்சகத்துக்கான குழு (சிசிஎஸ்) தாக்குதல் தொடர்பான நடவடிக்கை எடுக்க அதன் கூட்டத்தைக் கூட்டியது. சிசிஎஸ் அளித்த விளக்கத்தில், இந்த தாக்குதலில் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தின் தொடர்புகள் இருப்பது தெரியவந்துள்ளது.

யூனியன் பிரதேசத்தில் வெற்றிகரமாக தேர்தல் நடத்தப்பட்டு, பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு நோக்கிய ஜம்மு காஷ்மீரின் நிலையான நடைமுறைக்கு எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்திருந்தது. அந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் உள்ள தரை, கடல் மற்றும் வான் படைகளின் ஆலோசகர்களை திரும்பப் பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in