Published : 28 Apr 2025 07:50 AM
Last Updated : 28 Apr 2025 07:50 AM

பஹல்காம் தாக்குதல் குறித்து என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை

ஸ்ரீநகர்: பஹல்காம் தீவிரவாத தாக்குதல் குறித்து தேசிய புலனாய்வு அமைப்பின் (என்ஐஏ) மூத்த அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர்.

கடந்த 22-ம் தேதி ஜம்மு-காஷ்மீரில் பஹல்காமில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் கடந்த சில நாட்களாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சூழலில் என்ஐஏ சார்பில் நேற்று முன்தினம் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து என்ஐஏ மூத்த அதிகாரிகள் தீவிர விசாரணையை தொடங்கி உள்ளனர். மகாராஷ்டிரா, மேற்குவங்கம், குஜராத், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள், பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்து உள்ளனர்.

தாக்குதலின்போது அவர்களோடு இருந்த குடும்பத்தினரிடம் என்ஐஏ அதிகாரிகள் வாக்குமூலம் பெற்று வருகின்றனர். இதற்காக அந்தந்த மாநிலங்களில் சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று விசாரிக்கின்றனர்.

இதுகுறித்து என்ஐஏ வட்டாரங்கள் கூறியதாவது: தீவிரவாத தாக்குதல் நடைபெற்ற பஹல்காம் பகுதியில் என்ஐஏ தடயவியல் நிபுணர்கள் முக்கிய ஆதாரங்களை சேகரித்து உள்ளனர். தாக்குதலில் தொடர்புடைய 5 தீவிரவாதிகளின் வரைபடங்கள் ஏற்கெனவே வெளியிடப்பட்டு உள்ளன. அவர்களை குறித்து துப்பு கொடுப்போருக்கு ரூ.20 லட்சம் பரிசு தொகை அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் தற்போது இயங்கி வரும் 14 தீவிரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அவர்களையும் தீவிரமாக தேடி வருகிறோம். சுமார் 200 பேர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறோம்.

பஹல்காம் பகுதியில் குதிரைகளில் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்லும் நபர்கள், அந்த பகுதிகளில் உணவகம், கடைகளை நடத்தும் நபர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியை சேர்ந்த ஹமாஸ் தீவிரவாதிகள் கடந்த 6 மாதங்களாக ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் முகாமிட்டிருப்பதாக உளவுத் துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக ஹமாஸ் தீவிரவாத அமைப்பின் மூத்த தலைவர்கள் காலித் குவாதுமி, நாஜி ஜாகீர், முப்தி ஆசம் ஆகியோர் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகளை சந்தித்து பேசி உள்ளனர்.

இந்தியாவால் தேடப்படும் தீவிரவாதிகளான தல்கா சயீப், அஸ்கர் கான், மசூத் இலியாஸ் ஆகியோர் ஹமாஸ் தீவிரவாத தலைவர்களுடன் முக்கிய ஆலோசனை நடத்தி உள்ளனர். ஹமாஸ் தீவிரவாதிகள் பாணியில் பஹல்காமில் தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. இதுகுறித்து உளவுத் துறை உதவியுடன் தீவிர விசாரணை நட்ததி வருகிறோம்.

பாகிஸ்தானில் உள்ள லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபீஸ் சயீதுக்கு பஹல்காம் தாக்குதலில் தொடர்பு இருக்கிறது. இதுதொடர்பான ஆதாரங்களை திரட்டி வருகிறோம்.

ராணுவம், காஷ்மீர் காவல் துறையுடன் இணைந்து காஷ்மீரின் அனந்தநாக் பகுதியில் பல்வேறு வீடுகளில் சோதனை நடத்தி வருகிறோம். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். அந்த மாநிலங்களை சேர்ந்த என்ஐஏ அதிகாரிகள், பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளுக்கு சென்று தீவிரவாதிகளின் செயல்பாடுகள் எவ்வாறு இருந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வாறு என்ஐஏ வட்டாரங்கள் தெரிவித்தன.

காஷ்மீரை சேர்ந்த ராணுவ வட்டாரங்கள் கூறியதாவது: பஹல்காம் தாக்குதலை 5 தீவிரவாதிகள் நடத்தி உள்ளனர். இவர்கள் காஷ்மீரின் டிரால் வனப்பகுதியில் இருந்து பஹல்காம் பகுதிக்கு வந்துள்ளனர். சாலை வழியாக டிரால் நகரில் இருந்து பஹல்காம் வருவதற்கு 55 கி.மீ. தொலைவை கடக்க வேண்டும். பல்வேறு இடங்களில் சோதனை சாவடிகள் இருப்பதால் 5 தீவிரவாதிகளும் வனப்பகுதி வழியாகவே டிரால் நகரில் இருந்து பஹல்காம் வந்துள்ளனர்.

உள்ளூரை சேர்ந்த சிலரின் துணை இல்லாமல் 5 தீவிரவாதிகளும் வனப்பகுதியை கடந்து வந்திருக்க முடியாது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகிறோம். பஹல்காம் பகுதியில் சுமார் 300 கடைகள் செயல்படுகின்றன. இந்த கடைகளின் உரிமையாளர்கள், ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

தீவிரவாதிகள் பதுங்கல்: மிக நீண்ட காலமாக டிரால் வனப்பகுதி தீவிரவாதிகளின் புகலிடமாக இருக்கிறது. தாக்குதல் நடத்திய 5 தீவிரவாதிகளும் இந்த வனப்பகுதியில் பதுங்கியிருக்கக்கூடும் என்று சந்தேகிக்கிறோம். எனவே டிரால் வனப்பகுதிகளில் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x