“பாஜக, பாமக இருக்கும் அணியில் விசிக இடம்பெறாது” - திருமாவளவன் திட்டவட்டம்

புதுச்சேரியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற தொல் திருமாவளவன் | படம்: M.Samraj
புதுச்சேரியில் நிகழ்ச்சியில் பங்கேற்ற தொல் திருமாவளவன் | படம்: M.Samraj
Updated on
1 min read

புதுச்சேரி: பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் விசிக இடம்பெறாது என்று அதன் தலைவர் தொல் திருமாளவளவன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி திருபுவனையில் புதிதாக அமைக்கப்பட்ட அம்பேத்கரின் முழு உருவ சிலை திறப்பு நிகழ்வு நடந்தது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் சிலையை திறந்து வைத்து கட்சியில் பல்வேறு நிலைகளில் பணியாற்றியோருக்கு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர், "தமிழகத்தின் வேங்கை வயல், கள்ளக்குறிச்சி, மேல்பாதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்காக திமுக அரசின் காவல் துறையைக் கண்டித்து பல போராட்டங்களை நடத்தி உள்ளோம். இதற்கெல்லாம் அதிமுக போராட்டங்களை நடத்த வேண்டியது தானே?

திமுகவோடு நாம் தொடர்ந்து பயணிக்கிறோம் என்பதையே பலர் கேலி பேசுகிறார்கள். நான் கூட்டணிக்காக எல்லா கதவுகளையும் திறந்து வைத்திருக்கவில்லை. பாஜக-அதிமுகவோடும் தேவைப்பட்டால் மற்ற கட்சிகளோடும் கூட்டணிக்காக ஒரே நேரத்தில் 2 அணியிலும் பேசும் ராஜதந்திரம் நமக்குத் தெரியாது.

பாஜகவும், பாமகவும் இருக்கும் அணியில் ஒருபோதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இடம்பெறாது. புதிதாக கட்சி தொடங்கி இருக்கிற நடிகர் விஜய் கூட புத்தக வெளியீட்டு விழாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். விழாவுக்குச் செல்வதன் மூலம், ஒரு தவறான யூகத்தை கொடுத்து விடக்கூடாது, ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி விடக்கூடாது, அதன் மூலம் நாம் இருக்கிற அணி பலவீனப்பட்டால் பாஜகவுக்கு சாதகமாக அரசியல் சூழல் மாறிவிடும் என்பதையெல்லாம் யூகித்து அந்த விழாவையே புறக்கணித்தேன்.

எனக்காக திறந்து வைக்கப்பட்டிருந்த அதிமுக கதவை மூடியது போன்று விஜய் திறந்து வைத்திருந்த கதவையும் மூடினேன். ஆட்சியில் பங்கு, துணை முதல்வர் பதவி என ஆசை வார்த்தைகளால் என்னை வீழ்த்தி விட முடியாது. அரசியலில் நான் எடுக்கிற ஒவ்வொரு முடிவும் அம்பேத்கரின் கருத்துக்களை மனதில் வைத்து எடுக்கும் முடிவுகள்தான்" என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in