Published : 27 Apr 2025 07:08 AM
Last Updated : 27 Apr 2025 07:08 AM
புதுடெல்லி: தமிழகத்தின் தென்காசி மாவட்ட கடையநல்லூரை சேர்ந்த சுப்பையா – மலையம்மாள் தம்பதியின் மூத்த மகன் எஸ்.ராஜலிங்கம். திருச்சி என்ஐடி.யில் வேதியல் பிரிவில் 2003-ல் பட்டம் பெற்றவர். 2006-ம் ஆண்டு ஐபிஎஸ் வென்று உ.பி.யின் அலிகரில் பணியை தொடங்கினார். பின்னர், 2009-ல் ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று உபி பிரிவிலேயே பணியில் சேர்ந்தார். ஐஏஎஸ் பணியில் அவுரய்யா, சோன்பத்ரா, குஷி நகர் மற்றும் சுல்தான்பூர் ஆகிய மாவட்டங்களில் ஆட்சியராக பணியாற்றினார்.
கடந்த நவம்பர் 2022-ல் வாராணசியின் 58-வது ஆட்சியராக ராஜலிங்கத்தை முதல்வர் ஆதித்யநாத் நியமித்தார். இந்த மாவட்டத்தில் ஆட்சியராக நியமிக்கப்பட்ட முதல் தமிழரும் இவரே. சுமார் இரண்டரை ஆண்டு வாராணசி நிர்வாகத்தில் 3 காசி தமிழ்ச் சங்கமங்கள் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பிரதமர் உத்தரவின் பேரில் பல கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களையும் ராஜலிங்கம் அமல்படுத்தினார். இதனால், பிரதமர் மோடியின் அபிமானத்தை பெற்றார். பின்னர் பிரதமர் மோடி நேரடியாகவும் வீடியோ கான்பரன்சிங் கூட்டங்களிலும், ‘மிஸ்டர் ராஜலிங்கம்’ என்று பெயரைக் குறிப்பிட்டு அழைக்கும் அளவுக்கு நம்பிக்கைக்கு உரியவராக செயல்பட்டார்.
இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டது. எனினும், மகா கும்பமேளா, பல கோடி பக்தர்கள் வருகை, காசி தமிழ்ச் சங்கமம் 3.0 நிகழ்ச்சி உள்ளிட்ட முக்கிய பணிகள் இருந்ததால் ராஜலிங்கத்துக்கு பதவி உயர்வுக்கான பணி ஒதுக்கப்படவில்லை.
இந்நிலையில், அந்தப் பணிகளை அவர் சிறப்பாக செய்து முடித்ததால், தற்போது அவர் வாராணசியிலேயே மண்டல ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். வாராணசி மண்டலத்தின் 4 மாவட்ட ஆட்சியர்களின் பணிகளை மேற்பார்வையிடும் இந்த ஆணையர் பணியில் நியமிக்கப்பட்ட முதல் தமிழரும் இவர்தான்.
இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் ராஜலிங்கம் கூறும்போது, ‘‘புதிய பணியில், முக்கியமாக வாராணசியில் அமலாக்கிய ரூ.49,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை கண்காணிக்கும் பணியும் அடங்கியுள்ளது. அத்துடன் வாராணசி வளர்ச்சிக் கழகத்தின் தலைவர் என்ற கூடுதல் பணியும் உள்ளது. இந்த பதவியில், மண்டலத்தின் நகரங்களை விரிவடைய செய்வது, வாராணசி போக்குவரத்தை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்வது, நகரின் திடக்கழிவு மேலாண்மை உள்ளிட்ட பல பணிகளை செய்ய திட்டமிட்டுள்ளேன். காசி விஸ்வநாதர் கோயில் அறக்கட்டளை தலைவராக பக்தர்களுக்கான வசதிகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளேன். அதன் ஆலோசனைகளையும் வரவேற்கிறேன்’’ என்றார். ராஜலிங்கத்துக்கு மனைவி நித்யா மற்றும் மகன் வேலன் ஆகியோர் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT