ஜூன் - ஆகஸ்ட் வரை கைலாஷ் மானசரோவர் யாத்திரை

ஜூன் - ஆகஸ்ட் வரை கைலாஷ் மானசரோவர் யாத்திரை
Updated on
1 min read

இந்த ஆண்டில் வரும் ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கைலாஷ் மானசரோவர் யாத்திரை நடைபெறும் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

கைலாஷ் மானசரோவர் யாத்திரை என்பது இந்துக்கள் மேற்கொள்ளும் புனித யாத்திரைகளில் ஒன்றாகும். இது சிவபெருமானின் இருப்பிடமாக இந்துக்களால் கருதப்படும் கைலாஷ் மலைக்கும், மானசரோவர் ஏரிக்கும் மேற்கொள்ளப்படும் புனித யாத்திரை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2020-ம் ஆண்டுக்குப் பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், இந்தியா மற்றும் சீன நாடுகள் தரப்பில் ராணுவ படையினரை எல்லையில் உள்ள தெம்சோக் மற்றும் தெப்சாங் ஆகிய பகுதிகளில் இருந்து திரும்பப் பெற்றுள்ளனர். இதையடுத்து, 5 ஆண்டுகளுக்கு பிறகு கைலாஷ் மானசரோவர் யாத்திரை மீண்டும் தொடங்க உள்ளது.

இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது:

இந்த ஆண்டு கைலாஷ் மானசரோவர் யாத்திரை ஜூன் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் மேற்கொள்ளப்படும். இந்த யாத்திரை திட்டத்தை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் ஒருங்கிணைக்கும்.

இந்த ஆண்டு தலா 50 யாத்ரீகர்களை கொண்ட 5 குழுக்கள் உத்தராகண்டில் உள்ள லிபுலேக் கணவாய் வழியாகவும், 10 குழுக்கள் சிக்கிமில் உள்ள நாதுலா கணவாய் வழியாகவும் யாத்திரை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாத்திரை செல்ல விருப்பம் உள்ளவர்கள் தங்கள் விண்ணப்பங்களை kmy.gov.in என்ற இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். கணினி செயல்முறை மூலம் யாத்ரீகர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in