சுயதொழில் பெருக மத்திய அரசு நடவடிக்கை: 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி பிரதமர் மோடி பேச்சு

சுயதொழில் பெருக மத்திய அரசு நடவடிக்கை: 51 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணை வழங்கி பிரதமர் மோடி பேச்சு
Updated on
1 min read

நாட்டில் வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் தொடர்ந்து பெருகுவதை உறுதி செய்ய மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

பல்வேறு அரசு துறைகள் மற்றும் நிறுவனங்களில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு காணொலி காட்சி மூலம் நியமனக் கடிதங்களை பிரதமர் மோடி நேற்று வழங்கினார். இதைத் தொடர்ந்து பிரதமர் மோடி பேசியதாவது:

இன்று அரசு வேலைகளுக்கான நியமனக் கடிதங்களை 51,000-க்கும் மேற்பட்ட இளைஞர்களும், பெண்களும் பெற்றுள்ளனர். உங்கள் புதிய பொறுப்புகள் இன்று தொடங்கியுள்ளன. பொருளாதாரத்தை, உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்துவது, நவீன உள்கட்டமைப்பை மேம்படுத்துவது, தொழிலாளர்களின் வாழ்க்கையில் மாற்றங்களைக் கொண்டு வருவது உங்கள் பொறுப்பாகும். உங்கள் வேலையில் எவ்வளவு நேர்மையாக இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அது இந்தியாவின் வளர்ந்த பயணத்துக்கு உறுதுணையாக இருக்கும்.

வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் வாய்ப்புகள் தொடர்ந்து பெருகுவதை உறுதி செய்ய மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இருக்கும் என்று சர்வதேச நாணய நிதியம்(ஐஎம்எஃப்) கூறியுள்ளது.

ஒவ்வொரு துறையிலும் வேலைவாய்ப்புகள் உயரும். ஆட்டோமொபைல் மற்றும் காலணித் தொழில்களில் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் புதிய சாதனைகள் எட்டப்பட்டுள்ளன. இது மிகப் பெரிய எண்ணிக்கையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஒவ்வொரு துறையிலும் பெண்களின் பங்கேற்பு உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வில் முதல் 5 இடங்களைப் பிடித்தவர்களில் மூன்று பேர் பெண்கள். தொழில்நுட்பம், தரவு , புதுமை ஆகிய துறைகளில் இந்தியாவின் எழுச்சிக்கு இளைஞர்கள் உந்துசக்தியாக உள்ளனர்.

உள்நாட்டு நீர் போக்குவரத்தில் இந்தியா ஒரு புதிய சாதனையைப் படைத்து உள்ளது. 2014-க்கு முன்பு உள்நாட்டு நீர் போக்குவரத்து மூலம் 18 மில்லியன் டன் சரக்குகள் நகர்த்தப்பட்டன. இந்த ஆண்டு உள்நாட்டு நீர் போக்குவரத்து மூலம், சரக்கு இயக்கம் 145 மில்லியன் டன்களுக்கு மேல் எட்டியுள்ளது.

இது தொடர்பாக தொடர்ச்சியான கொள்கைகளை வகுத்துள்ளதால் இந்தியா இந்த சாதனையை பெற்றுள்ளது. முன்பு 5 தேசிய நீர்வழிகள் மட்டுமே இருந்தன. இப்போது, அது 110-ஐ தாண்டியுள்ளது. முன்பு நீர்வழிகளின் செயல்பாட்டு நீளம் சுமார் 2,700 கி.மீ. ஆக இருந்தது, தற்போது அது ஏறக்குறைய 5,000 கி.மீ. ஆக உள்ளது. நிகழ்நேர டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் நாடு முன்னணியில் இருக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in