“பாக். பிரதமர் கருத்துக்கு முக்கியத்துவம் தர விரும்பவில்லை” - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிரடி

“பாக். பிரதமர் கருத்துக்கு முக்கியத்துவம் தர விரும்பவில்லை” - காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதிரடி
Updated on
2 min read

ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்த பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் கருத்துகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை என்று ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ராம்பனில் உமர் அப்துல்லா இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயார் என அந்நாட்டு பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறி இருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த உமர் அப்துல்லா, "பஹல்காம் தாக்குலை முதலில் அவர்கள் உணரவில்லை. இந்தியாதான் இந்த தாக்குதலையே நடத்தியதாகக் கூறியவர்கள் அவர்கள். இத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்தவர்களுக்கு, இப்போது பதில் சொல்வது கடினம். அவர்களின் அறிக்கைகளுக்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. என்ன நடந்ததோ அது துரதிர்ஷ்டவசமானது, அது நடந்திருக்கக் கூடாது.

சுற்றுலாப் பயணிகளிடையே உள்ள அச்சத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. விடுமுறையில் இங்கு வருபவர்கள் அச்சத்தை அனுபவிக்க விரும்ப மாட்டார்கள். ஆனால் இந்த நேரத்தில், அவர்கள் (சுற்றுலாப் பயணிகள்) காஷ்மீரை விட்டு வெளியேறினால், அது நம் எதிரிகளுக்கு வெற்றியாகலாம். ஏனெனில், அவர்கள் அனைத்து சுற்றுலாப் பயணிகளையும் காஷ்மீரில் இருந்து வெளியேற்ற விரும்பியே சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்தனர்” என தெரிவித்தார்.

முன்னதாக, பஹல்காம் தாக்குதல் தொடர்பாக நடுநிலையான விசாரணைக்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக அந்நாட்டு பிரதமர் ஷொபஸ் ஷெரீஃப் தெரிவித்திருந்தார். அபோதாபாத்தில் உள்ள ராணுவ அகாடமியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் பேசிய பாகிஸ்தான் பிரதமர், "சமீபத்தில் பஹல்காமில் நடந்த துயரச் சம்பவம், பழி சுமத்தும் விளையாட்டுக்கான மற்றொரு உதாரணமாகும். இது ஒரு முடிவுக்கு வரவேணடும்.

எந்தவொரு நடுநிலையான, வெளிப்படையான, நம்பகமான விசாரணைகளிலும் பங்கேற்க பாகிஸ்தான் தயாராக உள்ளது. அதேநேரத்தில் கடந்த 2019-ம் ஆண்டின் இந்தியாவின் ஊடுருவலுக்கு பாகிஸ்தானின் உறுதியான பதிலடியால் நிரூபிக்கப்பட்டதன்படி, எந்தவொரு தவறான சாகசத்துக்கும் எதிராக தனது இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமையை காப்பதற்கு பாகிஸ்தான் முழு திறனுடன் தயார் நிலையில் உள்ளது" என்று தெரிவித்திருந்தார்.

தாக்குதலும் தாக்கமும்: முன்னதாக, காஷ்மீரில் மினி சுவிட்சர்லாந்து என்ற அழைக்கப்படும் பைசரன் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலாப் பயணிகள் 26 பேர் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி தரும் விதமாக இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்களின் விசாக்களை மத்திய அரசு ரத்து செய்வதாக அறிவித்தது. இதையடுத்து, ஞாயிற்றுக்கிழமைக்குள் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என கெடு விதிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பாகிஸ்தான் மீது பல்வேறு தடை நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டு வருகிறது. இதன்படி சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைப்பு, இந்தியா - பாகிஸ்தான் எல்லையாக பஞ்சாபில் அமைந்துள்ள அட்டாரி - வாஹா சோதனைச் சாவடி மூடல் என்பது போன்ற முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in