பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்: டெல்லியில் வர்த்தகர்கள் கடையடைப்பு

பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம்: டெல்லியில் வர்த்தகர்கள் கடையடைப்பு
Updated on
1 min read

பஹல்காம் தாக்குதலை கண்டித்து டெல்லியில் நேற்று சந்தைகள் மூடப்படிருந்தன. ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தலைநகர் டெல்லியில் வர்த்தகர்கள் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுத்ததை தொடர்ந்து நேற்று சந்தைகளில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. கான் மார்க்கெட் வியாபாரிகள் பேரணி நடத்தினர், இறந்தவர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றினர்.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் பாஜக யுவ மோர்ச்சா சார்பில் நேற்று முன்தினம் மாலையில் போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில பாஜக தலைவர் மன்மோகன் சமல் பங்கேற்று பேசுகையில், “அனைத்து வகையிலும் தீவிரவாதத்தை ஒழிக்க அரசு உறுதியுடன் உள்ளது" என்றார்.

ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக்கில், அரசு மகளிர் கல்லூரி மாணவிகள் நகரில் கண்டனப் பேரணி நடத்தினர். இதில் பங்கேற்ற மாணவி ஒருவர் கூறுகையில், “இந்த கொடூரமான செயலை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். பயங்கரவாதத்திற்கு ஒரு குறிப்பிட்ட மதம் இல்லை. காஷ்மீரிகளாகிய நாங்கள் எப்போதும் அமைதியின் பக்கம் நிற்போம்" என்றார்.

உ.பி.யின் அயோத்தியில் பஹல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணி நடத்தப்பட்டது. இதுபோல் சண்டிகரில் கண்டனப் போராட்டமும் ம.பி.யின் போபாலில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியும் நடைபெற்றது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in