Published : 26 Apr 2025 06:59 AM
Last Updated : 26 Apr 2025 06:59 AM
பஸ்தர்: மாவோயிஸ்ட்டுகளை முற்றிலும் ஒழிப்பதற்காக சத்தீஸ்கர், தெலங்கானா மற்றும் மகாராஷ்ட்ரா மாநில எல்லைகள் சந்திக்கும் மலைப் பகுதியை பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 10,000 வீரர்கள் சுற்றிவளைத்துள்ளனர். இந்த ஆபரேஷனுக்கு ‘‘தீர்க்கமான நடவடிக்கை’’ என பெயிரிடப்பட்டுள்ளது. இதில் சரணடைவது அல்லது இறப்பது என்ற இரு வழிகள் மட்டுமே மாவோயிஸ்ட்டுகளுக்கு உள்ளதாக கூறப்படுகிறது.
சத்தீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் தெலங்கானா மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகள் பிரச்சினை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இவர்களை முற்றிலும் ஒழிக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. மாவோயிஸ்ட் ஒழிப்பு நடவடிக்கைக்காக மகாராஷ்டிராவில் சி-60 கமாண்டோ பிரிவு உருவாக்கப்பட்டது.
அதேபோல் தெலங்கானா காவல்துறையில் க்ரேஹவுண்ட் என்ற பெயரில் சிறப்பு படை உருவாக்கப்பட்டது. சத்தீஸ்கரில் டிஆர்ஜி என்ற பெயரில் சிறப்பு படை உள்ளது. இது தவிர மத்திய அரசின் சிஆர்பிஎப் படையும் நக்சல் ஒழிப்பில் விமானப்படை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் ஈடுபட்டுள்ளது.
சத்தீஸ்கரில் கடந்த 2 ஆண்டுகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 300 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட் பிரச்சினைக்கு முற்றிலும் முடிவுகட்ட பாதுகாப்பு படைகளை சேர்ந்த 10,000 வீரர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளனர். கரேகட்டா, நட்பள்ளி மற்றும் புஜாரி கன்கெர் வனப்பகுதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து முன்னேறி வருகின்றனர்.
நக்சல் பட்டாலியன் எண்.1 படையை ஒழிப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படையில்தான் மாவோயிஸ்ட்களின் முக்கிய தலைவர்கள் ஹித்மா, தாமோதர், தேவா மற்றும் விகாஸ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் உள்ளனர். இவர்கள் தங்கியிருக்கும் மலைப் பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்து முன்னேறி வருகின்றனர். தற்போது மலை உச்சியில் பதுங்கியிருக்கம் மாவோயிஸ்ட்களை பாதுகாப்பு படையினர் சுற்றிவளைத்துள்ளனர். இவர்கள் தப்பிச் செல்லாத வகையில் மலைப் பகுதிகளில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளும் புதைத்து வைக்கப்பட்டுள்ளன.
கடந்த 72 மணி நேரமாக பாதுகாப்பு படையினர் மலை உச்சியை நோக்கி நகர்ந்து சென்று கொண்டிருக்கின்றனர். இந்த தேடுல் வேட்டையில் 3 பெண் நக்சலைட்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். மாவோயிஸ்ட்களிடம் தற்போது குறைந்த அளவிலேயே உணவு மற்றும் தண்ணீர் உள்ளதாக உளவுத் தவகல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு உணவுப் பொருட்கள் சென்று கொண்டிருந்த வெங்கட்புரம் மற்று பூர்வதி ஆகிய பகுதிகள் துண்டிக்கப்பட்டுள்ளன.
விமானப்படை ஹெலிகாப்டர்கள், ட்ரோன்கள் உதவியுடன் முன்னேறும் பாதுகாப்பு படையினர் ஒரு வாரத்துக்கு தேவையான உணவுப் பொருட்களுடன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது நக்சல் ஒழிப்பில் இறுதியான நடவடிக்கையாக இருக்கும் என கூறப்படுகிறது. மாவோயிஸ்டகளுக்கு சரணடைவது அல்லது பாதுகாப்பு படையின் துப்பாக்கி சூட்டில் உயிரிழப்பது என்ற இருவழிகள் மட்டுமே உள்ளன.
சத்தீஸ்கர் உள்துறை அமைச்சர் விஜய் சர்மா, ஏடிஜிபி விவேகானந்த் சின்ஹா, சிஆர்பிஎப் ஐஜி ராகேஷ் அகர்வால், பஸ்தர் ஐஜி சுந்தர்ராஜ் ஆகியோர் இந்த ஆபரேஷனை கண்காணித்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT