கர்நாடகாவுக்கு சுற்றுலா சென்ற தமிழக மருத்துவ மாணவிகள் இருவர் கடலில் மூழ்கி பலி

இந்துஜா, கனிமொழி
இந்துஜா, கனிமொழி
Updated on
1 min read

கர்நாடகாவில் உள்ள கோகர்ணாவுக்கு சுற்றுலா சென்ற தமிழகத்தை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவிகள் இருவர் அரபிக் கடலில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் உள்ள எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இறுதி ஆண்டு தேர்வை முடித்த மாணவர்கள் 23 பேர் கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டத்தில் உள்ள கோகர்ணாவுக்கு சுற்றுலா சென்றனர்.

நேற்று முன் தினம் தண்டேலி, அங்கோலா, முருடேஷ்வர் ஆகிய இடங்களை சுற்றிப் பார்த்துவிட்டு மாலையில் கோகர்ணாவை அடைந்தனர். அங்குள்ள குட்லே கடற்கரையில் சூரிய அஸ்தமனத்தை பார்த்தவாறு மாணவர்கள் கடலில் குளித்துள்ளனர்.

அப்போது மாணவிகள் கனிமொழி (23), இந்துஜா (23) ஆகியோர் ராட்சத அலையில் சிக்கி கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டனர். அப்பகுதியைச் சேர்ந்த மீனவர் மணிராஜூ படகு மூலம் அவர்களை மீட்க முயன்றும் அலையின் வேகத்தால் அது முடியாமல் போனது.

இது குறித்து தகவல் அறிந்த குட்லே கடற்கரை சாகச படகு குழுவினர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். கடலில் மூழ்கிய இரு மாணவிகளையும் மீட்டு கோகர்ணா அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். மாணவிகள் இருவரும் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். பின்னர் இருவரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக காரவார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இறந்த மாணவிகளின் உடல் அவர்களது பெற்றோரிடமும் நேற்று ஒப்படைக்கப்பட்டன.

இந்த விவகாரம் தொடர்பாக கோகர்ணா போலீஸார் தர்மபுரியை சேர்ந்த சுற்றுலா வழிகாட்டி காந்தி சிவக்குமார், சென்னை வெற்றி டிராவல்ஸ் உரிமையாளர் வெற்றி செல்வன் ஆகியோர் மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in