

ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 26 பேரில் ஆந்திராவை சேர்ந்த ஓய்வுபெற்ற வங்கி ஊழியர் ஜே.சி.சந்திரமவுலியும் ஒருவர். அவருடன் சென்ற நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் நூலிழையில் உயிர்தப்பினர். உயிர்தப்பிய விதம் குறித்து நண்பர் சசீதர் கூறியதாவது:
எனது நண்பர் சந்திரமவுலிக்கு கடந்த 18-ம் தேதி 70 வயதானது. எனவே பிறந்த நாள் பயணமாக எங்களை பஹல்காம் அழைத்துச் சென்றார். மொத்தம் 3 தம்பதியருக்கான ஒட்டுமொத்த பயணத்தையும் அவர்தான் திட்டமிட்டிருந்தார்.
பஹல்காம் நகரில் இருந்து பைசரன் பள்ளத்தாக்கு பகுதிக்கு நாங்கள் 6 குதிரைகளில் சென்றோம். கடினமான பயணத்தால் வழியில் பெண்கள் களைப்படைந்தனர். ஆனால், "வாழ்க்கையில் இந்த வாய்ப்பு ஒருமுறைதான் கிடைக்கும்" என்று கூறி அவர்களை மவுலிதான் ஊக்கப்படுத்தினார்.
நாங்கள் பைசரன் சென்றவுடன் முதலில் கழிப்பறைக்கு சென்றோம். வெளியே வந்ததும் மரங்கள் அடர்ந்த பகுதியில் இருந்து துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. யாராவது வேட்டைக்காரர்கள் சுடுவார்கள் என்றுதான் முதலில் நினைத்தோம். ஆனால் மீண்டும் மீண்டும் துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்டது. பெண்கள் அலறுவதும் சிலர் தரையில் விழுந்து கிடப்பதையும் பார்த்தோம்.
பிறகுதான் இது தாக்குதல் என்பதை புரிந்து கொண்டு கழிப்பறைக்கு பின்னால் சென்று மறைந்து கொண்டோம். பிறகு கம்பி வேலியில் இருந்த இடைவெளி வழியாக வெளியேறி ஒரு சிற்றோடையை கடந்தோம். பிறகு சிறிய குன்று மீது ஏறினோம். அப்போதுதான் தீவிரவாதி ஒருவர் எங்களை பின்தொடர்ந்து வருவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தோம். எங்கள் அருகில் வந்த அவர் 3-4 முறை சுட்டார். பிறகு பெண்களை நோக்கி சென்ற அவர், பிறகு அங்கிருந்து திரும்பிச் சென்றார். அவரால் எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றுதான் நினைத்தோம். பிறகுதான் துப்பாக்கி குண்டு பாய்ந்து சந்திரமவுலி இறந்து கிடைப்பதை பார்த்தோம். நாங்கள் தப்பினாலும் எங்கள் நண்பரை இழந்து விட்டோம். இவ்வாறு சசீதர் கூறினார்.