பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த பொறியாளர் உடலுக்கு பவன் கல்யாண் அஞ்சலி

பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த பொறியாளர் உடலுக்கு பவன் கல்யாண் அஞ்சலி
Updated on
1 min read

நெல்லூர்: பஹல்காம் தாக்குதலில் இறந்த ஆந்திர பொறியாளர் மதுசூதன்ராவின் உடலுக்கு மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று அஞ்சலி செலுத்தினார். ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டம், காவலி பகுதியை சேர்ந்த வாழைப்பழ வியாபாரி திருப்பாலின் மகன் மதுசூதன் ராவ் (42). பெங்களூருவில் பொறியாளராக பணியாற்றி வந்த இவருக்கு காமாட்சி என்ற மனைவியும் மேது (17) எனும் மகளும் தத்து (13) என்கிற மகனும் உள்ளனர்.

இந்நிலையில் கோடை விடுமுறைக்கு மதுசூதன் ராவ் தனது குடும்பத்தாருடன் காஷ்மீர் சென்றிருந்தார். அங்கு பஹல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலில் பரிதாபமாக உயிரிழந்தார். இவரது உடல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை வந்தடைந்தது. பிறகு காரில் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது.

அதுவரை மகன் இறந்த விஷயத்தை அறியாத பெற்றோர், அதிர்ச்சி அடைந்து கதறி அழுதனர். மதுசூதன் உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள் மற்றும் மக்கள் ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் ராம்நாராயண் ரெட்டி, நாராயணா, அரசு அதிகாரிகளும் மரியாதை செலுத்தினர்.

இந்நிலையில் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று திருப்பதி வழியாக நெல்லூர் சென்று, மதுசூதன் ராவின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் கூறுகையில் தீவிரவாதிகள் உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவர்களை விட்டுவைக்க முடியாது. தீவிரவாதத்தை அடியோடு களை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நீ எந்த மதம் என்று கேட்டுகொலை செய்துள்ளது மன்னிக்க முடியாத குற்றம். ஜம்மு காஷ்மீர் வளர்ச்சியை ஜீரணிக்க முடியாத அமைப்புகளின் செயல் இது" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in