‘காஷ்மீர் மக்களை எதிரிகளாக நினைக்காதீர்கள்!’ - மாநில முதல்வர் உமர் அப்துல்லா உருக்கம்

உமர் அப்துல்லா | கோப்புப்படம்
உமர் அப்துல்லா | கோப்புப்படம்
Updated on
1 min read

ஸ்ரீநகர்: காஷ்மீர் மக்களை எதிரிகளாக கருத வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார். காஷ்மீரின் பஹல்காமில் ஏப்.22-ம் தேதி நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்கு நாடுமுழுவதும் துக்கம் கடைபிடிக்கப்பட்டும், எதிராக போராட்டமும் நடந்து வரும் நிலையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய உமர் அப்துல்லா, பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருடன் உறுதுணையாக தெரிவித்துள்ளவர், இந்தச் சம்பவத்துக்காக காஷ்மீர் மக்களை குற்றம்சாட்டவேண்டாம் என்று நாட்டு மக்களிடம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் உமர் கூறுகையில், “தங்களின் விடுமுறையை கழிக்க இங்கு வந்த 25 விருந்தினர்களானாலும் சரி, அங்குள்ள மக்களின் உயிரைக் காப்பாற்ற தனது உயிரைத் தியாகம் செய்த இப்பள்ளத்தாக்கைச் சேர்ந்த நபரானாலும் சரி இந்தத் துயரமான சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எனது பொறுப்புணர்வை தெரிவிக்க விரும்புகிறேன். அதேபோல், தாக்குதலுக்கு பின்பு வெளியே வந்து அதனைக் கண்டித்த காஷ்மீர் மக்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

தாக்குதலுக்கு பின்பு வெளியே வந்து அதனைக் கண்டித்து குரல் கொடுத்த காஷ்மீர் மக்கள் சொல்ல விரும்பியது, இந்தத் தாக்குதலில் அவர்களுக்கு எந்தத் தொடர்பும் இல்லை. இது அவர்களுக்காக நடத்தப்பட்டது இல்லை என்பதைத்தான். நாட்டு மக்களிடம் நான் ஒரு விஷயத்தைத் தான் கேட்டுக்கொள்கிறேன். காஷ்மீர் மக்களை உங்களின் எதிரிகளாக கருத வேண்டாம். நாங்கள் குற்றாவளிகள் இல்லை. கடந்த 35 ஆண்டுக்கும் மேலாக நாங்களும் இதனால் துன்பப்பட்டு வருகிறோம். தயவுசெய்து அதுபோன்று பேசுவதை தவிர்க்கவும், அவைகளை நிறுத்துமாறும் நாங்கள் வேண்டுகிறோம்.

காஷ்மீர் மக்கள் அமைதிக்கு எதிரானவர்கள் இல்லை. அவர்கள் அமைதியை விரும்புகிறவர்கள். நடந்தவைகள் எல்லாம் எங்களின் விருப்பத்துக்கு எதிரானவை. இவ்வாறு நடக்கக்கூடாது என்பதே எங்களின் விருப்பம். நடந்த சம்பவம் துரதிருஷ்டமானது" என்று தெரிவித்தார்.

காஷ்மீரின் பஹல்காம் அருகிலுள்ள பைசரன் புல்வெளியில் பயங்கரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2019-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் நடந்த தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதுக்கு பின்பு நடந்த மிகவும் கொடூரமான தாக்குதலாக பஹல்காம் சம்பவம் கருதப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in