Published : 23 Apr 2025 07:21 AM
Last Updated : 23 Apr 2025 07:21 AM

இந்​தி​யா​வின் வளர்ச்​சி​யில் இணைய வேண்​டும்: உலகளாவிய நிறுவன சிஇஓ-க்​களுக்கு நிர்மலா சீதாராமன் அழைப்பு

புதுடெல்லி: இந்தியாவின் வளர்ச்சியில் இணைய வேண்டும் என உலகளாவிய நிறுவனங்களின் சிஇஓ-க்களுடன் நடைபெற்ற சந்திப்பில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். அவர் உலகளாவிய நிறுவனங்களின் சிஇஓ-க்களை தனித்தனியாக சந்தித்து பேசினார். டூரிங் நிறுவனத்தின் சிஇஓ ஜொனாதன் சித்தார்த் பேசுகையில், செயற்கை நுண்ணறிவு புரட்சியில் இந்தியா முன்னணியில் இருக்க வேண்டும் எனவும், இதற்காக இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது பற்றி விவரித்தார்.

டேட்டாரோபோட் நிறுவனத்தின் சிஇஓ தேபன்ஜன் ஷாகா கூறுகையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியா சூப்பர்சக்தியாக திகழ்வதற்கான சாத்தியங்கள் குறித்து விவரித்தார். மத்திய அரசு பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ள ரூ.500 கோடி மதிப்பிலான ஏஐ சீர்மிகு மையத்தில் இணைந்து செயல்படவும் விருப்பம் தெரிவித்தார்.

விஎம்வேர் நிறுவனத்தின் சிஇஓ ரகு ரகுராம், ஆண்ட்ரீசன் ஹோரோவிட்ஸ் நிறுவனத்தின் ஆஞ்நே மிதா ஆகியோருடனான சந்திப்பில், பிரதமர் மோடியின் வழிகாட்டுதலில் இந்திய விண்வெளித்துறையில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்கள் குறித்து நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார். விண்வெளித்துறையின் ஏஐ பிரிவில் அவர்கள் இணைந்து செயல்படுவது குறித்து ஆராயும்படி கேட்டுக் கொண்டார்.

கூகுள் கிளவுட் நிறுவனத்தின் சிஇஓ தாமஸ் குரியன் மற்றும் அவரது குழுவினரையும் நிர்மலா சீதாராமன் சந்தித்து, டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி குறித்து ஆலோசித்தார். இந்தியாவின் ஏஐ திட்டத்தை தாமஸ் குரியன் பாராட்டினார். 2030-ம் ஆண்டுக்குள் உலகம் முழுவதும் கூகுள் கிளவுட் டேட்டா மையங்கள் அனைத்தும் பசுமை எரிசக்தியில் செயல்பட இலக்கு நிர்ணயித்துள்ளதாக தாமஸ் குரியன் தெரிவித்தார்.

இந்தியாவின் கொள்கை மற்றும் சீர்திருத்தங்களில் சிஇஓ.,க்கள் தெரிவித்த கருத்துக்களை நிர்மலா சீதாராமன் கேட்டறிந்தார். அப்போது நிதித்துறை செயலாளர் அஜய் சேத் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் வினய் மோகன் குவெத்ரா ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்தியா ஏஐ திட்டத்துக்கு ரூ.10,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறித்தும், டிஜிட்டல் கட்டமைப்பை ஊக்கவிக்க மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து நிர்மலா சீதாராமன் எடுத்துரைத்தார். தனியார் ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புதுமை கண்டுபிடிப்பு திட்டங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி தொகுப்பு நிதி ஒதுக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதால், உலகளாவிய நிறுவனங்கள் இணைந்து செயல்படுவதற்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x