

குவாஹாட்டி: அசாமில் பஞ்சாயத்து தேர்தல் மே 2, 7 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்வா நேற்று முன்தினம் தேமாஜி நகரில் பேசுகையில், "அசாமில் கடந்த 2001 முதல் 2016 வரையிலான காங்கிரஸ் ஆட்சியில் எந்த வளர்ச்சிப் பணியும் நடைபெறவில்லை.
தேமாஜியில் மருத்துவம், பொறியியல் கல்லூரிகள் அப்போது இல்லை. 10-ம் வகுப்பிலும் கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டது. அவை தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது. மக்களுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது.
ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் லுங்கியும் வேட்டியும் மட்டுமே வழங்கப்பட்டது. எனவேதான் கைக்கு பதிலாக லுங்கியை தேர்தல் சின்னமாக மாற்றிக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் கட்சியினரை கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மாநில காங்கிரஸ் தலைவர் புபேன் குமார் போரா நேற்று கூறுகையில், “லுங்கி, வேட்டி, பைஜாமா, கால்சட்டை என எதுவாக இருந்தாலும் அனைத்து ஆடைகளையும் காங்கிரஸ் சமமாக கருதுகிறது. எங்கள் சின்னம் குறித்து பாஜக கட்டளையிட முடியும் என்றால் அக்கட்சிக்கு நான் ஒன்றை சொல்லிக் கொள்கிறேன்.
தாமைரைக்கு பதிலாக காந்தியை கொன்ற கோட்சேவின் துப்பாக்கியை ஏன் தேர்தல் சின்னமாக பாஜக பயன்படுத்தக் கூடாது?” என்றார்.