

உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்காக 6 உறுப்பினர்கள் கொண்ட தனிக்குழுவை நியமிப்பதற்கான அரசியல் சாசன சட்டத்திருத்த மசோதா இன்று நாடாளுமன்றத்தின் மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் "தேசிய நீதித்துறை நியமன ஆணைய மசோதா, 2014" என்ற மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் இந்த மசோதாக்களைத் தாக்கல் செய்தார்.
தற்போது ‘கொலீஜியம்’ என்று அழைக்கப்படும் நீதிபதிகள் நியமனக் குழு மூலம் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனம் செய்யப்படுகின்றனர். இந்த கொலீஜியம் முறையை அகற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தேசிய நீதித்துறை நியமன ஆணையத் தலைமை பொறுப்பிற்கு நியமிக்கப்படுவார். மேலும் நீதித்துறை பிரதிநிதிகளாக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் இருவர் நியமிக்கப்படுவர், தவிர 2 முக்கியஸ்தர்கள் மற்றும் சட்ட அமைச்சர் அந்த தனிக்குழுவில் இடம்பெறுவர்.
எதிர்கால அரசும் இந்த முறையை எளிதில் மாற்றிவிட முடியாது, காரணம் இது அரசியல் சாசன சட்டத் தகுதி பெற்றது. அரசியல் சாசன சட்டத் திருத்த மசோதாவை தாக்கல் செய்ய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. ஆனால் சாதாரண மசோதாக்களைத் தாக்கல் செய்ய வெறும் பெரும்பான்மை இருந்தால் போதும்.
எனவே எதிர்காலத்திலும் நீதிபதிகள் நியமன முறையில் மாற்றம் ஏற்படுத்தி விட முடியாத அளவுக்கு இந்த மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனிக்குழுவில் 2 முக்கியஸ்தர்களைத் தேர்ந்தெடுக்க தலைமை நீதிபதி, பிரதமர், நாடாளுமன்றத்தின் எதிர்கட்சித் தலைவர் அல்லது அதிக இடங்களைப் பெற்ற கட்சியின் நாடாளுமன்றத் தலைவர் ஆகியோர் அடங்கிய கொலீஜியம் அமைக்கப்படும்.
குழுவில் தேர்வு செய்யப்படும் 2 முக்கியஸ்தர்களில் ஒருவர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர் அல்லது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர், அல்லது பெண் ஆகியோராக இருக்கலாம்.
தேர்ந்தெடுக்கப்படும் 2 முக்கியஸ்தர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுகள். மீண்டும் இவர்கள் இந்தப் பதவிக்குத் தேர்வு செய்யப்பட மாட்டார்கள்.