Published : 22 Apr 2025 07:15 AM
Last Updated : 22 Apr 2025 07:15 AM
பெங்களூரு: இஸ்ரோவின் ஸ்பேடெக்ஸ் செயற்கைக்கோள்களை 2-வது முறையாக இணைக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது.
இதுகுறித்து மத்திய அணுசக்தி, விண்வெளி, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை இணையமைச்சர் ஜிதேந்திர சிங் எக்ஸ் சமூக ஊடகத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: ஸ்பேடெக்ஸ் திட்டத்தின் கீழ் 2 செயற்கைக்கோள்களை 2-வது முறையாக இணைக்கும் முயற்சி வெற்றி பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
கடந்த 2024-ம் ஆண்டு டிசம்பர் 30-ம் தேதி, ஸ்பேடெக்ஸ் ஏ, ஸ்பேடெக்ஸ் பி ஆகிய 2 செயற்கைக்கோள்கள் பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட் மூலம் ஏவப்பட்டு விண்ணில் நிலைநிறுத்தப்பட்டது. பின்னர் இந்த 2 செயற்கைக்கோள்களும் 2025-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி வெற்றிகரமாக விண்ணிலேயே இணைக்கப்பட்டது.
பின்னர் மார்ச் 13-ம் தேதி வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. இந்நிலையில், 2-வது முறையாக அந்த செயற்கைக்கோள்கள் மீண்டும் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது. அடுத்த 2 வாரங்களில் மேலும் சில சோதனைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின்மூலம் 2 செயற்கைக்கோள்களை இணைக்கும் தொழில்நுட்பத்தை அறிந்த நாடுகள் வரிசையில் இந்தியாவும் இணைந்தது. பொதுவான நோக்கங்களுக்காக ராக்கெட்களை விண்ணில் ஏவும்போது, அவற்றை இணைக்கும் தொழில்நுட்பம் மிகவும் அவசியமாகிறது.
பாரதிய அந்தரிக்ஷ் நிலையம் மற்றும் சந்திரனில் விண்வெளி வீரரை தரையிறக்குவது போன்ற இஸ்ரோவின் எதிர்கால திட்டங்களுக்கு இந்த சோதனை மிகவும் அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT