Published : 22 Apr 2025 08:15 AM
Last Updated : 22 Apr 2025 08:15 AM

அலிபிரி மலைப்பாதை வழியாக செல்லும் பக்தர்களுக்கு திவ்ய தரிசன டோக்கன் வழங்கப்படுமா?

திருமலை: திருப்பதி அலிபிரி மலைப்பாதை வழியாக திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்களுக்கு வழியில் ‘திவ்ய தரிசனம்’ டோக்கன்கள் வழங்கப்படுமா ? என பக்தர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தற்போது கோடை விடுமுறைக்காலம் என்பதால் திருப்பதியில் ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். ஆனால், அலிபிரி மலைப்பாதை வழியாக நடந்து செல்லும் பக்தர்களுக்கு மீண்டும் ‘திவ்ய தரிசனம்’ முறை அமல்படுத்த வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கடந்த ஒய்எஸ்ஆர் ஜெகன் ஆட்சியில் ஏழுமலையான் பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த வசதிகளை ஒவ்வொன்றாக ரத்து செய்து வந்தனர். கரோனா தொற்று சமயத்தில் திவ்ய தரிசன டோக்கன் விநியோகம் முழுவதையும் ரத்து செய்தனர். அதன் பின்னர், பழையபடி வழங்குவோம் என கூறினாலும், அலிபிரி மார்க்கத்தில் சிறுத்தையின் தாக்குதலில் ஒரு சிறுமி உயிரிழந்ததால், திவ்ய தரிசன டோக்கன் வழங்குவதை யாரும் கண்டு கொள்ளவில்லை.

சந்திரகிரி அருகே உள்ள ஸ்ரீவாரிமெட்டு மார்கத்தில் 2,100 படிகள் உள்ளன. இதன் மூலம் பக்தர்கள் ஒன்றரை மணி நேரத்திலேயே திருமலையை சென்றடைகின்றனர். 3,650 படிகள் உள்ள அலிபிரி மார்க்கத்தில் பல கோயில்கள், கோபுரங்கள், அழகிய மலைப்பிரதேசங்கள், மான் பூங்கா போன்றவை பக்தர்களை மகிழ்ச்சி அடைய செய்யும். ஒரு முழுமையான ஆன்மீக பயணத்தை அது வழங்கும்.

வழியில் குடிநீர், கழிப்பறை வசதிகளையும் தேவஸ்தானம் செய்துள்ளதாலும், அதிகமாக கடைகள் உள்ளதாலும் இவ்வழியாக பக்தர்கள் பாதயாத்திரை செல்வதை அதிகம் விரும்பி வருகின்றனர். இந்த தடத்தில் சாதாரண நாட்களில் 8 ஆயிரம் பேரும், சனி, ஞாயிறு போன்ற நாட்களில் 15 ஆயிரம் பக்தர்களும் நடந்து செல்வது வழக்கம்.

முன்பு, அலிபிரி மார்க்கத்தில் 14,000 பேரும், ஸ்ரீவாரி மெட்டு மார்கத்தில் 6,000 வீதம் தினமும் 20,000 டோக்கன்கள் வழங்கப்பட்டு வந்தன. வைகுண்டம் கியூ வரிசையில் சிறப்பு தரிசனம் (ரூ.300 டிக்கெட்) கால்நடையாக வந்த பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர். மேலும், இவர்களுக்கு இலவச லட்டு பிரசாதமும் வழங்கப்பட்டு வந்தது. கரோனா தொற்றுக்கு பின்னர், அலிபிரி மார்க்கத்தில் இந்த திவ்ய தரிசன டோக்கன்கள் விநியோகத்தை முற்றிலுமாக தேவஸ்தானம் ரத்து செய்தது.

அதன் பின்னர், முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு வந்ததும், திவ்ய தரிசன டோக்கன் முறையை மீண்டும் அமல்படுத்துவோம் என்ற அறிவிப்பும் வந்தது. காலி கோபுரம் அருகே இதற்கான ஏற்பாடுகளும் நடந்தன. ஆனால், என்ன நடந்தது என தெரியவில்லை. இந்த திட்டம் மீண்டும் கிடப்பில் போடப்பட்டது.

திவ்ய தரிசனம் டோக்கன் தற்போது ஸ்ரீவாரி மெட்டு மார்க்கத்தில் மட்டுமே வழங்கப்படுவதால், பக்தர்கள் ஸ்ரீவாரி மெட்டு இருக்கும் ஸ்ரீநிவாச மங்காபுரம் வரை செல்ல நேரிடுகிறது. இதனை பயன்படுத்தி திருப்பதியில் டாக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்கள் கொள்ளை அடிக்கும் தோரணையில் கட்டணம் வசூலிப்பதாகவும் பக்தர்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஒவ்வொரு பக்தரிடம் இருந்தும் ரூ.500 முதல் ரூ.1000 வரை ஸ்ரீவாரி மெட்டு வரை இறக்கி விட வசூலிப்பதாக சந்திரகிரி போலீஸ் நிலையத்தில் புகார்கள் கூட நிலுவையில் உள்ளன.

இந்த இடத்திலும் தினமும் 3,000 திவ்ய தரிசன டோக்கன்கள் மட்டுமே விநியோகம் செய்வதால், மதியத்துக்குள் இவை தீர்ந்து போய் விடுகின்றன. ஆதலால், ஆட்டோ, டாக்ஸிக்கு செலவு செய்து செல்லும் பக்தர்களும் டோக்கன்கள் கிடைக்காமல் மதியத்திற்கு பிறகு என்ன செய்வது என தவிக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இவர்கள் திருப்பதியில் இலவச டோக்கன்களையும் பெறாமல், ஸ்ரீவாரிமெட்டு மார்க்கத்தில் திவ்ய தரிசன டோக்கன்களையும் பெற முடியாமல் சர்வ தரிசனத்தில் செல்லும் நிலை ஏற்படுகிறது. தற்போது கோடை விடுமுறை காலம் என்பதால் திருமலைக்கு அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். இவர்களை கருத்தில் கொண்டு, இரு மார்க்கங்களிலும் திவ்ய தரிசன டோக்கன்களை திருப்பதி தேவஸ்தானம் விநியோகம் செய்ய வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x