Published : 22 Apr 2025 07:30 AM
Last Updated : 22 Apr 2025 07:30 AM
புதுடெல்லி: இந்தியா வந்துள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் நேற்று பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார். அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் 4 நாள் அரசு முறை பயணமாக நேற்று டெல்லி வந்தடைந்தார். அவருடன் மனைவியும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான உஷா வான்ஸ், 3 குழந்தைகள் வந்துள்ளனர்.
டெல்லி பாலம் விமான நிலையம் வந்தடைந்த வான்ஸை மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வரவேற்றார். துணை அதிபரான பிறகு முதல் முறையாக இந்தியா வந்துள்ள வான்ஸுக்கு முப்படை அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் டெல்லியில் உள்ள சுவாமி நாராயணன் அக்சர்தாம் கோயிலுக்கு வான்ஸ் குடும்பத்தினர் சென்றனர். பின்னர் மத்திய குடிசைத் தொழில்கள் மையத்துக்கு சென்றனர்.
இதுகுறித்து ஜே.டி.வான்ஸ் எக்ஸ் தளத்தில், “இந்த அழகான இடத்துக்கு (அக்சர்தாம் கோயில்) வந்த எங்களுக்கு சிறப்பான வரவேற்பு கொடுத்தமைக்கு மிக்க நன்றி. மிகவும் அழகான இந்த கோயிலை எங்கள் குழந்தைகள் நேசித்தார்கள். கடவுள் ஆசிர்வதிக்கட்டும்” என கூறியுள்ளார். நேற்று மாலை பிரதமர் நரேந்திர மோடியை அவரது இல்லத்தில் அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் சந்தித்துப் பேசினார். அப்போது, வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவை மேலும் பலப்படுத்துவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் மீதான பரஸ்பர (இறக்குமதி) வரி விதிப்பை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளார். இதனிடையே, இரு நாடுகளுக்கிடையே இந்த ஆண்டு இறுதிக்குள் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது என பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்தபோது இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர். ஆனால் இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே இறுதி செய்வது குறித்து பிரதமர் மோடியும் ஜே.டி.வான்ஸும் நேற்று ஆலோசனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. பின்னர் வான்ஸுக்கு பிரதமர் மோடி இரவு விருந்து அளித்தார்.
இதையடுத்து, நேற்று இரவு ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினர் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் சென்றடைந்தனர். இன்று அவர்கள் அமீர் கோட்டையை பார்வையிடுகின்றனர். பின்னர் ராஜஸ்தான் சர்வதேச மையத்தில் நடைபெறும் அமெரிக்க-இந்திய வர்த்தக உச்சி மாநாட்டில் வான்ஸ் பங்கேற்கிறார். இரு நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்தக் கூட்டத்தில், இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு குறித்து வான்ஸ் உரையாற்றுவார் எனத் தெரிகிறது.
வான்ஸ் குடும்பத்தினர் நாளை ஆக்ரா நகருக்கு சென்று தாஜ்மஹாலை பார்வையிடுகின்றனர். பின்னர் அங்கிருந்து மீண்டும் ஜெய்ப்பூர் செல்லும் அவர்கள் ஜெய்ப்பூர் நகர அரண்மனையை பார்வையிடுகின்றனர். 24-ம் தேதி ஜெய்ப்பூரில் இருந்து ஜே.டி.வான்ஸ் குடும்பத்தினர் அமெரிக்கா புறப்பட்டுச் செல்கின்றனர்.
குர்த்தா பைஜாமா: ஜே.டி.வான்ஸ், மனைவி உஷா 2 மகன்கள் ஒரு மகளுடன் இந்தியா வந்துள்ளார். விமானத்தில் இருந்து அவர்களின் மூத்த மகன் இவான் இந்திய பாரம்பரிய உடையான குர்த்தா பைஜாமா அணிந்தபடி இறங்கி வந்தான். அடுத்தபடியாக 2-வது மகன் விவேக்கும் குர்த்தா பைஜாமா அணிந்தபடி வந்தான். பின்னர் அனார்க்கலி உடை அணிந்திருந்த 3 வயது இளைய மகள் மிராபெலை ஊழியர் ஒருவர் அழைத்து வந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT