நீதிமன்றத்தில் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த குற்றவாளி

நீதிமன்றத்தில் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த குற்றவாளி
Updated on
1 min read

புதுடெல்லி: காசோலை மோசடி வழக்கில் தண்டிக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த குற்றவாளியும் அவரது வழக்கறிஞரும் பெண் நீதிபதிக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.

டெல்லி துவாரகா நீதிமன்றத்தில் 6 ஆண்டு கால காசோலை மோசடி வழக்கு ஒன்றில் குற்றவியல் நடுவர் ஷிவாங்கி மங்களா கடந்த 2-ம் தேதி தீர்ப்பு அளித்தார். அதில் அவர், குற்றம் சாட்டப்பட்டப்பட்ட ஓய்வுபெற்ற ஆசிரியரை குற்றவாளி என அறிவித்தார்.

இதனால் அந்த ஆசிரியரும் அவரது வழக்கறிஞரும் நீதிபதி மீது ஆத்திரமடைந்தனர். அப்போது அந்த ஆசிரியர் நீதிபதியிடம் "நீ எப்படி உயிருடன் வீடு திரும்புகிறாய் என்று நாங்கள் பார்க்கிறோம்?" என மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் கையில் இருந்த ஒரு பொருளை பெண் நீதிபதி மீது வீச முயன்றுள்ளார்.

இதுகுறித்து நீதிபதி ஷிவாங்கி மங்களா பிறப்பித்துள்ள உத்தரவில், “குற்றவாளியும் அவரது வழக்கறிஞரும் என்னை ராஜினாமா செய்யுமாறு கூறி மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தினர், குற்றவாளியை விடுவிக்காவிட்டால் என் மீது புகார் அளித்து பணியை விட்டு விலகுமாறு செய்வோம் என்று மிரட்டினர்.

எனவே குற்றவாளி மீது தேசிய மகளிர் ஆணையம் உரிய நடடிக்கை எடுக்க வேண்டும். அவரது வழக்கறிஞர் அதுல் குமாரின் தவறான நடத்தைக்காக அவருக்கு எதிரான குற்றவியல் நடவடிக்கைகளை தொடங்க டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு ஏன் பரிந்துரைக்க கூடாது என்பதற்கான விளக்கத்தை அதுல்குமார்

எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளார். இந்த சம்பவத்திற்கு 3 நாட்களுக்கு பிறகு ஏப்ரல் 5-ம் தேதி காசோலை மோசடி வழக்கில் அந்த ஆசிரியருக்கு நீதிபதி ஷிவாங்கி 22 மாத சிறை தண்டனையும் ரூ.6.65 லட்சம் அபராதமும் விதித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in