கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கத்தியால் குத்தி கொலை: மனைவி கைது

மனைவி பல்லவியுடன் ஓம் பிரகாஷ்
மனைவி பல்லவியுடன் ஓம் பிரகாஷ்
Updated on
2 min read

பெங்களூரு: கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் (68) பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு உள்ளார். இவ்வழக்கில் ஓம் பிரகாஷின் மனைவி, மகளிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பிஹார் மாநிலத்தை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ் (68). கடந்த‌ 1981-ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக அவர் தேர்ச்சி பெற்றார். கர்நாடக காவல் துறையில் ஐஜி ஆகவும், டிஜிபியாகவும் பணியாற்றி கடந்த 2017-ம் ஆண்டில் ஓய்வு பெற்றார். பெங்களூருவில் உள்ள ஹெச்.எஸ்.ஆர்.லே அவுட்டில் மனைவி பல்லவி, மகள் கீர்த்தியுடன் அவர் வசித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை ஓம் பிரகாஷ் அவரது வீட்டில் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ஹெச்.எஸ்.ஆர்.லே அவுட் போலீஸார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவரது வீட்டில் இருந்து ரத்தக் கறை படிந்த 2 கத்திகள், உடைந்த பாட்டில், மிளகாய் பொடி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து ஓம் பிரகாஷின் மகன் கார்த்திகேஷ் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது: எனது தந்தைக்கும் எனது தாய் மற்றும் சகோதரிக்கும் இடையே நீண்ட நாட்களாக பிரச்சினை இருந்து வருகிறது. சொத்து பிரச்சினை காரணமாக எனது தாயும், சகோதரியும் தந்தையுடன் சண்டையிட்டு வந்தனர். இதனால் கடந்த வாரம் அவர் வீட்டை விட்டு வெளியேறி, தனது சகோதரியின் வீட்டில் தங்கியிருந்தார்.

2 நாட்களுக்கு முன்பு தொலைபேசியில் அவருடன் சண்டை போட்டு, மீண்டும் வீட்டுக்கு வரவழைத்தனர். பலமுறை எனது தாய், சொத்துகளை த‌னது பெயருக்கு மாற்றி எழுதாவிட்டால், கொலை செய்துவிடுவேன் என தந்தையை மிரட்டியுள்ளார். தற்போது எனது தந்தை கொல்லப்பட்ட செய்தி தெரியவந்தவுடன், என் தாய் மீதும் சகோதரி மீதும் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்தால் உண்மை தெரியவரும் இவ்வாறு கார்த்திகேஷ் கூறியுள்ளார்.

இந்நிலையில் பெங்களூரு மாநகர துணை காவல் ஆணையர் குமார், முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷின் வீட்டில் நேற்று சோதனை நடத்தினார். பின்னர் அவர் கூறும்போது, ''அவரது உடலில் 8 இடங்களில் கத்தியால் குத்தப்பட்டுள்ளது. அதிகபடியான ரத்தம் வெளியேறியதால் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலைக்கு மிளகாய் பொடி, கத்தி, பாட்டில் போன்றவை பயன்படுத்தப்பட்டுள்ளன. ஓம் பிரகாஷின் மனைவி பல்லவி, மகள் கீர்த்தி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இருவரையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்துள்ளோம். 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தப்பட்டு வருகிறோம்'' என்றார்.

வாட்ஸ் அப்பில் பகிர்ந்த தகவல்: விசாரணை அதிகாரிகளிடம் பேசியபோது, ''சொத்து வாங்கியது மற்றும் அதனை நிர்வகிப்பதில் ஓம் பிரகாஷுக்கும் அவரது மனைவிக்கும் இடையே சண்டை இருந்துள்ளது. ஓம் பிரகாஷின் நிலத்தை அவரது சகோதரிக்கு கொடுத்ததால் சண்டை வெடித்துள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலையில் ஓம் பிரகாஷ் ஓய்வாக இருந்த சமயத்தில் அவரது மனைவி மிளகாய் பொடியை முகத்தில் வீசி கொலை செய்துள்ளார். ஓம் பிரகாஷிடம் இருந்த துப்பாக்கியையும் பறித்து மறைத்து வைத்துள்ளார். தனது கணவரை கொன்ற பின்னர், 'அரக்கனை கொன்றுவிட்டேன்' என தனது நெருக்கமான உறவினரிடம் கூறியுள்ளார்'' என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in