அறங்காவலர்கள் என கூறி வக்பு கடைகளுக்கு 17 ஆண்டுகளாக வாடகை வசூலித்த 5 பேர் கைது

அறங்காவலர்கள் என கூறி வக்பு கடைகளுக்கு 17 ஆண்டுகளாக வாடகை வசூலித்த 5 பேர் கைது
Updated on
1 min read

அகமதாபாத்: குஜராத்தில் வக்பு நிலத்தில் அமைந்துள்ள கடைகளுக்கு அறங்காவலர்கள் என்று கூறிக்கொண்டு 17 ஆண்டுகளாக வாடகை வசூலித்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் வக்பு வாரியத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட காஞ்சினி மஸ்ஜித் அறக்கட்டளை மற்றும் ஷா பாதா காசம் அறக்கட்டளைக்கு சொந்தமாக நிலம் உள்ளது. இதில் சிலர் சட்டவிரோதமாக 5 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் 100 வீடுகள் மற்றும் கடைகள் கட்டியுள்ளனர். இந்த அறக்கட்டளைகளின் அறங்காவலர்கள் என கூறிக்கொண்டு இவர்கள் கடந்த 2008 முதல் 2025 வரை வாடகை வசூலித்து வந்துள்ளனர்.

இந்நிலையில் அங்கு வாடகைக்கு இருந்த ஒருவர் போலீஸில் அளித்த புகாரில், “வாடகை வசூலிப்பவர்கள் அறக்கட்டளையின் உண்மையான அறங்காவலர்கள் அல்ல. வாடகை பணத்தை இவர்கள் அறக்கட்டளைகள் பெயரில் டெபாசிட் செய்வதில்லை. பொது நோக்கங்களுக்காக பயன்படுத்துவதில்லை" என்று கூறியிருந்தார்.

இது தொடர்பாக அகமதாபாத் நகரின் கேக்வாத் ஹவேலி காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்தி, சலீன் கான் பதான், முகம்மது யாசர் ஷேக், மகமூதுகான் பதான், ஃபைஸ் முகம்மது சோப்தார், ஷாகித் அகமது ஷேக் ஆகிய 5 பேரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து துணை காவல் ஆணையர் பாரத் ரத்தோட் கூறுகையில், “வக்பு வாரியத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட அறக்கட்டளைகளுக்கு சொந்தமான சொத்துகளை இவர்கள் தனிப்பட்ட நலன்களுக்காக பயன்படுத்தியது கண்டறியப்பட்டது. மோசடி மற்றும் போலி ஆவணங்களை தயாரித்ததற்காக இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுள்ளது. இவர்களில் சலீம் கான் பதான் மீது ஏற்கெனவே 5 வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in