பசிக்கொடுமையை மறக்க மருந்து? - டெல்லி சிறுமிகள் பட்டினி மரணத்தில் புதிய தகவல்

பசிக்கொடுமையை மறக்க மருந்து? - டெல்லி சிறுமிகள் பட்டினி மரணத்தில் புதிய தகவல்
Updated on
1 min read

டெல்லியில் பசிக்கொடுமையில் 3 சிறுமிகள் உயிரிழந்த நிலையில், அவர்களின் வயிற்று பகுதியில் மீண்டும் நடத்தப்பட்ட உடல் கூறாய்வில் மருந்து பொருட்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. சிறுமிகளுக்கு பசி எடுக்காமல் இருக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

டெல்லியில் உள்ள மந்தாவாலி பகுதியில் உள்ள ஜிடிபி அரசு மருத்துவமனைக்கு அண்மையில் 8 வயது, 4 வயது, 2 வயதைச் சேர்ந்த சிறுமிகள் 3 பேர் உடல்நலக்குறைவுடன் கொண்டுவரப்பட்டனர். இந்த 3 சிறுமிகளையும் அவரின் தாயும், அவரின் தோழியும் அழைத்து வந்தனர்.

இந்தச் சிறுமிகள் 3 பேரையும் பரிசோதித்த மருத்துவர்கள் இவர்கள் ஏற்கெனவே இறந்துவிட்டனர் எனத்தெரிவித்தனர். இதையடுத்து, மருத்துவமனை சார்பில் போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தச் சிறுமிகளின் தாயிடம் விசாரணை நடத்திய போலீஸார் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

உடற்கூறு ஆய்வு செய்த மருத்துவர்கள் அறிக்கையில்,  ‘‘அந்த 3 சிறுமிகள் உடலின் வயிற்றிலும் எந்தவிதமான உணவும் இல்லை, இவர்கள் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இந்தச் சிறுமிகளின் உடலிலும், உடல் உள்ளுறுப்புகளிலும் எந்தவிதமான காயமும் இல்லை முறையான உணவுகள் இல்லாத காரணத்தால், பட்டினியால் இறந்துள்ளனர்’’ என்று தெரிவித்தனர்.

பட்டினியால் சிறுமிகள் இறந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தலைநகர் டெல்லியில் உணவின்றி குழந்தைகள் உயிரிழக்கும் நிலை இருப்பதாக கூறி அம்மாநில முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்நிலையில் அந்த குழந்தைகளின் வயிற்று பகுதியை மீண்டும் உடல்கூறாய்வு சோதனை செய்து பார்க்கப்பட்டது. இதில் அந்த குழந்தையின் வயிற்று பகுதியில் விநோதமான மருந்து போன்ற பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அதன் மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக் கூடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

வீட்டில் கடுமையான வறுமை நிலவிய நிலையில், உணவுக்காக பணம் செலவு செய்ய முடியாத சூழலில் அந்த குடும்பம் இருந்துள்ளது. இதனால் ‘கை வைத்திய முறையில்’ ஏதேனும் மூலிகை குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது.

இதன் மூலம் குழந்தைகளுக்கு பசி எடுக்காமல் இருக்கச் செய்ய முடியும் என்ற எணணத்தில் கொடுக்கப்பட்டிருக்கலாம் என கருதப்படுகிறது. எனினும் ஆய்வகத்தில் குழந்தைகளின் வயிற்றில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னேரே அதன் தன்மை குறித்து தெரிய வரும் என டெல்லி போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in