Last Updated : 20 Apr, 2025 12:55 AM

1  

Published : 20 Apr 2025 12:55 AM
Last Updated : 20 Apr 2025 12:55 AM

பிரதமர் நரேந்திர மோடி ஏப். 22-ல் சவுதி அரேபியா பயணம்

பிரதமர் நரேந்திர மோடி வரும் 22-ம் தேதி சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். அப்போது புதிய பொருளாதார வழித்தடம் குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2016 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவுக்கு சென்றார். இதைத் தொடர்ந்து 3-வது முறையாக வரும் 22-ம் தேதி அவர் சவுதி அரேபியாவுக்கு செல்கிறார். இதுகுறித்து மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கடந்த 2023-ம் ஆண்டில் டெல்லியில் நடைபெற்ற ஜி - 20 உச்சி மாநாட்டில் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மான் பங்கேற்றார். இரு நாடுகளுக்கும் இடையே ஆழமான நட்புறவு நீடிக்கிறது. அரசியல், பாதுகாப்பு, வர்த்தகம், முதலீடு, எரிசக்தி, தொழில்நுட்பம், சுகாதாரம், கல்வி, கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையே வலுவான உறவு நீடிக்கிறது.

இந்த சூழலில் இளவரசர் முகமது பின் சல்மானின் அழைப்பை ஏற்று ஏப்ரல் 22, 23 ஆகிய தேதிகளில் பிரதமர் நரேந்திர மோடி சவுதி அரேபியாவில் அரசு முறை பயணம் மேற்கொள்கிறார். இந்த பயணத்தின்போது இருநாடுகள் இடையிலான உறவு மேலும் வலுவடையும். பிராந்திய, சர்வதேச விவகாரங்கள் குறித்தும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்படும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

புதிய பொருளாதார வழித்தடம்: மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த 2023-ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற ஜி - 20 உச்சி மாநாட்டில் இந்தியா, மத்திய கிழக்கு, ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (ஐஎம்இசி) திட்டம் அறிவிக்கப்பட்டது. இது பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டம் ஆகும். இந்த திட்டத்தில் இந்தியா, அமெரிக்கா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஐரோப்பிய ஒன்றியம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி ஆகிய நாடுகள் கையெழுத்திட்டு உள்ளன.

ஐஎம்இசி வழித்தடம் 6,000 கி.மீ. நீளம் கொண்டது. இதில் 3,500 கி.மீ. கடல் வழி பாதை ஆகும். இந்த திட்டத்தின்படி இந்தியாவின் மும்பை, ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜபல் அலி, அல் குவைபத், சவுதி அரேபியாவின் ஹரத், ரியாத், அல் ஹதீதா, இஸ்ரேலின் ஹைபா, கிரீஸ் நாட்டின் பிரேயஸ் ஆகியவை கடல், சாலை, ரயில் பாதை வழியாக இணைக்கப்பட உள்ளன.

தற்போது இந்தியாவில் இருந்து புறப்படும் சரக்கு கப்பல் ஜெர்மனியை சென்றடைய 36 நாட்கள் ஆகிறது. ஐஎம்இசி வழித்தடம் பயன்பாட்டுக்கு வரும்போது 14 நாட்களில் இந்திய சரக்குகள் ஜெர்மனியை சென்றடையும். புதிய வழித்தடத்தால் சர்வதேச அளவிலான போக்குவரத்து செலவு 30 சதவீதம் குறையும். சரக்கு கப்பல்களின் பயண நேரம் 40 சதவீதம் வரை குறையும்.

மேலும் ஐஎம்இசி வழித்தடத்தில் இருபுறமும் மின்சாரம், தொலைத்தொடர்பு கேபிள்கள் பதிக்கப்படும். ஹைட்ரஜன், பெட்ரோலிய பொருட்களை கொண்டு செல்ல ராட்சத குழாய்களும் பதிக்கப்படும். சூரிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும். இந்த திட்டத்தால் இந்தியா, மத்திய கிழக்கு நாடுகள், ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரம் அபரிதமாக வளர்ச்சி அடையும்.

இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு இடையிலான போர் காரணமாக ஐஎம்இசி பொருளாதார வழித்தடம் திட்டத்தில் காலதாமதம் ஏற்பட்டது. தற்போது ஹமாஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் ஐஎம்இசி திட்டத்தை செயல்படுத்த தீவிரம் காட்டப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த பிப்ரவரியில் பிரான்ஸ் சென்றார். அப்போது ஐஎம்இசி திட்டத்துக்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான் முழு ஆதரவு தெரிவித்தார். சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த ஐஎம்இசி திட்டத்தை விரைந்து செயல்படுத்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் விரும்புகிறார்.

இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் சவுதி அரேபிய பயணம் சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்றிருக்கிறது. இந்த பயணத்தின்போது பிரதமர் மோடியும் சவுதி அரேபிய இளவரசர் சல்மானும் ஐஎம்இசி பொருளாதார வழித்தட திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் பிரம்மோஸ் ஏவுகணைகளை வாங்க சவுதி அரேபியா ஏற்கெனவே விருப்பம் தெரிவித்திருக்கிறது. இதுதொடர்பாகவும் இரு தலைவர்கள் இடையே முக்கிய பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது. இவ்வாறு மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x