உ.பி-யில் பொதுமக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்ததால் நூற்றுக்கணக்கானோர் திரண்டு காவல் அதிகாரிக்கு பிரியாவிடை

பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் துறை அதிகாரியை மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்று பிரியாவிடை கொடுக்கும் உள்ளூர் மக்கள். அடுத்த படம். காவல் அதிகாரி வினோத் குமார் சிங்.
பணியிட மாற்றம் செய்யப்பட்ட காவல் துறை அதிகாரியை மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துச் சென்று பிரியாவிடை கொடுக்கும் உள்ளூர் மக்கள். அடுத்த படம். காவல் அதிகாரி வினோத் குமார் சிங்.
Updated on
1 min read

தியோரியா: உத்தர பிரதேச மாநிலத்தில் மக்களின் மனங்களை வென்ற காவல் துறை அதிகாரியின் பணியிட மாற்றத்துக்கு நூற்றுகணக்கானோர் திரண்டு பிரியாவிடை கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மதன்பூர் காவல்நிலைய பொறுப்பாளராக பணியாற்றி வந்தவர் வினோத் குமார் சிங். இவர், காவல் துறையில் பணியாற்றும் பாணி உள்ளூர் மக்களை வெகுவாக ஈர்த்தது. இந்த நிலையில், ஆறு மாதங்களுக்குப் பிறகு வினோத் குமாருக்கு பணியிடமாற்றத்துக்கான உத்தரவு வந்தது. இதையடுத்து, ஊர்மக்கள் அனைவரும் ஒன்றாக திரண்டு மாலை அணிவித்து, மேளா தாளங்கள் முழங்க குதிரை சவாரி ஊர்வலத்துடன் பணியிடமாற்றம் பெற்ற வினோத் குமாருக்கு உள்ளூர் மக்கள் பிரியாவிடை அளித்தனர். பலர் அவரது பிரிவை தாங்கமுடியாமல் சோகத்தில் உறைந்தனர்.

காவல் அதிகாரி வினோத் குமார் தனது பணிக் காலத்தில் உள்ளூர் மக்களின் பாதுகாப்புக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் தீவிரமாக பல நடவடிக்கைகளை எடுத்துள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக கூட, தனது காவல் எல்லைக்கு உட்பட்ட சரித்திர பதிவேடு குற்றவாளிகள் அனைவரையும் ஒன்றாக கூட்டி அணிவகுப்பு ஒன்றை நடத்தியுள்ளார். இது, குற்றவாளிகளின் மனதில் ஒருவித பயத்தை ஏற்படுத்த காரணமானது. இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் பாராட்டை பெற்றது.

அதேபோன்று, பல ஏழைப் பெண்களின் திருமணத்துக்கும் காவல் அதிகாரி வினோத் குமார் பல்வேறு உதவிகளை செய்துள்ளார். சமீபத்தில் சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்ட ஒருவரின் மகளுக்கு தேவையான உதவிகளை செய்து திருமணத்தை நடத்தி வைத்ததை உள்ளூர் மக்கள் நன்றியுடன் அவரை நினைவுகூர்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in