Published : 18 Apr 2025 02:20 PM
Last Updated : 18 Apr 2025 02:20 PM
இந்தூர்: “பணம், மது மற்றும் பரிசு பொருட்களுக்காக வாக்களிப்பவர்கள் மீண்டும் ஒட்டகம், ஆடு, செம்மறியாடு, நாய் மற்றும் பூனைகளாக பிறப்பார்கள்" என்று மத்தியப்பிரதேச முன்னாள் அமைச்சரும், பாஜக எம்எல்ஏ-வுமான உஷா தாகுர் தெரிவித்துள்ளார்.
தனது மோவ் தொகுதியின் ஹசல்புர் கிராமத்தில் புதன்கிழமை நடந்த விழா ஒன்றில் கலந்து கொண்டு உஷா தாகுர் பேசியதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறுது. அந்த வீடியோவில் அவர், “லட்லி பேஹ்னா யோஜனா, கிசான் சம்மான் நிதி போன்ற பாஜக அரசின் பல்வேறு திட்டங்களின் மூலம் மாதம் தோறும் பயனாளர்களின் கணக்குகளில் ஆயிரக்கணக்கான ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இதற்கு பின்பும், ரூ.500 - 1000-க்காக தங்களின் வாக்குகளை விற்பது அவமானமான செயலாகும்.
வாக்களிக்கும் போது ஒருபோதும் நேர்மையை இழக்காதீர்கள். கடவுள் மேலே இருந்து அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறார். பணம், சேலை, கண்ணாடி மற்றும் மது பாட்டில்களை வாங்கிக் கொண்டு வாக்களிப்பவர்கள் குறித்து வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த பிறவியில் ஒட்டகம், ஆடு, செம்மறியாடு, நாய் மற்றும் பூனையாக பிறப்பீர்கள். தங்களின் ஜனநாயக கடமையை விற்பனை செய்பவர்கள் இவைகளாகத்தான் பிறப்பார்கள். நான் கடவுளுடன் நேரடியாக பேசுவேன். என்னை நம்புங்கள்.” என்று பேசியுள்ளார்.
இதேபோன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்காக உஷா தாகுர் முன்பும் செய்திகளில் இடம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தேசம், மதம் மற்றும் கலாச்சாரத்தை பாதுகாக்க பாஜகவுக்கு மட்டுமே வாக்களிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியிருந்தார்.
தற்போதைய கருத்து குறித்து உஷா தாகுரிடம் கேட்கப்பட்ட போது, “கிராமப்புற வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அவ்வாறு பேசினேன். ஜனநாயகம் நமது வாழ்க்கை. அரசியலமைப்பு விதிகளுக்கு உட்பட்டு மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இதற்கு பின்பும் தேர்தல் நேரத்தில் பணம், மது மற்றும் பிற பொருட்களுக்காக வாக்குகளை விற்பது மன்னிக்க முடியாத குற்றமாகும்.
நமது செயல்பாடுகளின் அடிப்படையிலேயே நாம் அடுத்த பிறவியை அடைகிறோம். நமது செயல்கள் தவறாக இருந்தால், நிச்சயம் நாம் மனிதர்களாக பிறக்கமாட்டோம்.” என்று தெரிவித்தார்.
இதனிடையே தாகுரின் பேச்சு குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பிரதேச காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் மிரினால் பாண்ட், “இது உஷா தாகுரின் பழமைவாத சிந்தனையை மட்டும் எடுத்துகாட்டவில்லை. மோவ்வில் உள்ள பாஜக தலைவர்களுக்கு இடையேயான உட்கட்சி பூசல்களையும் சுட்டிக்காட்டுகிறது.” என்று விமர்சித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT