Published : 18 Apr 2025 12:54 PM
Last Updated : 18 Apr 2025 12:54 PM
கொல்கத்தா: மேற்கு வங்கத்தின் மால்டா, முர்ஷிதாபாத் உள்ளிட்ட மாவட்டங்களில் வுக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராக நடந்த போராட்டங்களில் வன்முறை வெடித்ததை அடுத்து, அப்பகுதிகளை நேரில் பார்வையிட அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் சென்றுள்ளார்.
இதற்காக, இன்று (ஏப்ரல் 18, 2025) சீல்டா ரயில் நிலையத்துக்கு வந்த சி.வி.ஆனந்த போஸ், அங்கிருந்து ரயில் மூலம் மால்டாவுக்கு புறப்பட்டார். மால்டா மாவட்டத்தில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட உள்ள ஆளுநர், அங்கு தனது ஆய்வை முடித்துக் கொண்டு முர்ஷிதாபாத் செல்ல உள்ளார். அங்கும் நிலைமையை அவர் பார்வையிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, மேற்கு வங்க ஆளுநர் மாளிகை வெளியிட்ட எக்ஸ் பதிவில், “மாநிலத்தில் சமீபத்தில் நடந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் இணைந்து முடிந்த அனைத்தையும் ஆளுநர் செய்வார்.” என தெரிவிக்கப்பட்டிருந்தது. உண்மை நிலையை கண்டறியவே அவர் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல உள்ளார் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
“நான் களத்தின் யதார்த்தங்களை நேரில் காண களத்திற்குச் செல்கிறேன். நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க நாம் கூடுதல் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். நான் நிச்சயமாக முர்ஷிதாபாத்துக்குச் செல்வேன். அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் அங்கு ஒரு பிஎஸ்எஃப் முகாமை அமைக்கக் கோரியுள்ளனர்," என்று ஆளுநர் சி.வி. ஆனந்த போஸ் கூறினார்.
வக்பு சட்டத்தில் மத்திய அரசு மேற்கொண்ட திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 11ம் தேதி மேற்கு வங்கத்தின் மால்டா, முர்ஷிதாபாத் உள்ளிட்ட முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மாவட்டங்களில் வன்முறை வெடித்தது. அங்குள்ள இந்துக்கள் தாக்கப்பட்டார்கள். அவர்களின் சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. இந்த வன்முறையில் மூன்று பேர் கொல்லப்பட்டனர், பலர் காயமடைந்தனர். பல குடும்பங்கள் இடம்பெயர்ந்துள்ளன. பலர் ஜார்க்கண்டின் பாகூர் மாவட்டத்திற்கு குடிபெயர்ந்துள்ளனர். மற்றவர்கள் மால்டாவில் அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
இதனிடையே, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க மத்தியப் படைகள் சிறிது காலம் முர்ஷிதாபாத்தில் தங்கியிருக்கும் என்றும், பாதிக்கப்பட்டவர்களின் மறுவாழ்வை நீதிமன்றம் கண்காணிக்கும் என்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை கூறியது. பாஜக, டிஎம்சி மற்றும் பிற கட்சிகளைச் சேர்ந்தவர்கள் யாரும் பதட்டத்தை அதிகரிக்கக்கூடிய ஆத்திரமூட்டும் பேச்சுகளை நடத்த வேண்டாம் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT