

நாக்பூர்: மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸின் தேர்தல் வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரி, அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை சம்மன் அனுப்பியுள்ளது.
மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தல் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து பட்னாவிஸ் முதல்வரானார்.
இந்நிலையில் பட்னாவிஸின் தேர்தல் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி, நாக்பூர் தென்மேற்கு சட்டப்பேரவை தொகுதியில் அவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரபுல்லா வினோத்ராவ் வழக்கு தொடர்ந்தார். இவர் 39,710 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தவர்.
விதிமுறை மீறல்: கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற தேர்தலில் பல விதிமுறைகளை பின்பற்றப்படவில்லை. தேர்தலில் பல முறைகேடுகள் நடைபெற்றன. அதனால், பட்னாவிஸ் வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என பிரபுல்லா வினோத்ராவ் தனது மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த மகாராஷ்டிரா உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை, முதல்வர் பட்னாவிஸ் மே 8-ம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பியது.