

குடியரசுத் தலைவருக்கு நீதிமன்றங்கள் உத்தரவு பிறப்பிக்க முடியாது என குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் நேற்று நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கர் பேசியதாவது: டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14-ம் தேதி இரவு தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, ஒரு அறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை தீயணைப்பு வீரர்களும் போலீஸாரும் பார்த்துள்ளனர். ஆனால் இது தொடர்பான தகவல் ஒரு வாரத்துக்குப் பிறகுதான் ஊடகங்களில் வெளியானது. இதைப் பார்த்து நாட்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தாமதமாக இந்த தகவலை வெளியிட்டது கண்டிக்கத்தக்கது. இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும். நாட்டு மக்களால் மதிக்கப்படும் நீதித் துறை குற்றவாளி கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க குடியரசுத் தலைவர், மாநில ஆளுநர்களுக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு விதித்திருப்பது கண்டிக்கத்தக்கது. நீதிமன்றங்கள் குடியரசுத் தலைவரை வழிநடத்தும் சூழ்நிலை ஜனநாயகத்தில் இருக்க முடியாது. நீதிமன்றங்கள் குடியரசுத் தலைவருக்கு எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்க முடியாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழக அரசு தொடர்ந்த ஒரு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், குடியரசுத் தலைவர் மற்றும் மாநில ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க காலக்கெடுவை நிர்ணயித்து சமீபத்தில் உத்தரவு பிறப்பித்தது. இதை மனதில் வைத்துதான் ஜெகதீப் தன்கர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.