Published : 16 Apr 2025 04:42 PM
Last Updated : 16 Apr 2025 04:42 PM
புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் 52-ஆவது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாயை நியமிக்க, மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தற்போதைய தலைமை தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா பரிந்துரைத்துள்ளார். இதையடுத்து, அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் மே 14-ஆம் தேதி பதவியேற்க உள்ளார்.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா கடந்த 2024-ஆம் ஆண்டு நவம்பரில் பதவியேற்றார். இவரது பதவிக் காலம் வரும் மே 13-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் மே 14-ஆம் தேதி பொறுப்பேற்க உள்ளார்.
முன்னதாக, உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு சஞ்சீவ் கண்ணாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் கடந்த வாரம் கடிதம் அனுப்பியது. இதனையடுத்து, தனக்கு அடுத்ததாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்புக்கு நீதிபதி பி.ஆர்.கவாயின் பெயரை சஞ்சீவ் கண்ணா பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது. நீதிபதி பி.ஆர்.கவாய் நவம்பர் 2025-ல் ஓய்வு பெற உள்ளதால், சுமார் 6 மாதங்களுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருப்பார்.
முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணனுக்குப் பிறகு தலைமை நீதிபதி பதவியை ஏற்கும் இரண்டாவது தலித் நீதிபதி கவாய் ஆவார். உச்ச நீதிமன்ற மூத்த நீதிபதியாக, கவாய் பல முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளார். அவற்றில் மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை உறுதி செய்த தீர்ப்பு மற்றும் தேர்தல் பத்திரத் திட்டத்தை அரசியலமைப்புக்கு விரோதமானது என்று அறிவித்த தீர்ப்பு உள்ளிட்டவை அடங்கும்.
மகாராஷ்டிராவின் அமராவதியில் நவம்பர் 24, 1960-ல் பிறந்த நீதிபதி கவாய், 1985-இல் தனது சட்டப் பணியைத் தொடங்கினார். ஆகஸ்ட் 1992-இல், அவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் உதவி அரசு வழக்கறிஞராகவும், கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் 2000-ஆம் ஆண்டில் அதே அமர்வில் அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றார்.
நீதிபதி கவாய் நவம்பர் 14, 2007 அன்று மும்பை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பின்னர், மும்பையில் உள்ள உயர் நீதிமன்றத்தின் முதன்மை இருக்கையிலும், நாக்பூர் அவுரங்காபாத் மற்றும் பனாஜியில் உள்ள அமர்வுகளிலும் பணியாற்றினார். மே 24, 2019 அன்று உச்ச நீதிமன்றத்திற்கு அவர் பதவி உயர்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT