Published : 16 Apr 2025 08:03 AM
Last Updated : 16 Apr 2025 08:03 AM
முர்ஷிதாபாத்: சொந்த மண்ணிலேயே நாங்கள் அகதிகளாக மாறி வசிக்க வேண்டிய நிலை வந்துவிட்டது என்று முர்ஷிதாபாத் நகரத்தில் வசிக்கும் பெண்கள் முறையிட்டு வருகின்றனர். வக்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் முர்ஷிதாபாத்தில் கடந்த வாரம் நடந்த போராட்டம், வன்முறைச் சம்பவங்களில் முடிந்தது. இந்த வன்முறைச் சம்பவங்களில் 3 பேர் உயிரிழந்தனர்.
வன்முறைச் நிகழ்ந்தபோது வீட்டின் உள்ளே ஒளிந்து இருந்த ஹர்கோபிந்தோ தாஸ் (72), அவரது மகன் சந்தன் தாஸ் (40) உட்பட 3 பேர் வீட்டுக்கு வெளியே இழுத்து வரப்பட்டு குத்திக் கொல்லப்பட்டனர். இதையடுத்து அங்கு போலீஸாரும், துணை ராணுவத்தினரும் குவிக்கப்பட்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் இந்த வன்முறைச் சம்பவத்தின்போது சுமார் 400 பேர் முர்ஷிதாபாத்தின் பல்வேறு கிராமங்களில் இருந்து தப்பியோடினர். அவர்களை மீட்புப் படையினர் மீட்டு, பள்ளிகளில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் தங்க வைத்துள்ளனர். இந்த சம்பவத்தில் சிக்கி பாதிப்படைந்த சப்தமி மண்டல் (24) என்ற பெண், பர்லாப்பூர் பகுதியிலுள்ள உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் தங்கியுள்ளார்.
வன்முறை சம்பவத்தால் ஏற்பட்ட பயம் அவரது கண்ணிலிருந்து விலகவில்லை. தனது 8 வயது பெண் குழந்தையை மடியில் போட்டுக் கொண்டு அவர் பேசியதாவது: வன்முறைச் சம்பவம் நடந்த அன்று நாங்கள் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தோம். உயிரைக்கையில் பிடித்துக் கொண்டு கால்போன போக்கில் ஓடி தப்பித்தோம். எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 400 பேர் தப்பியோடினோம்.
என் கணவர் கொல்கத்தாவில், கட்டிட வேலை பார்க்கிறார். நான் துலியான் கிராமத்தில் தங்கியிருந்தேன். இனி கிராமத்துக்கு திரும்புவோமா என்பது தெரியாது. மரண பயம்தான் இன்னும் நெஞ்சில் இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். சப்தமியின் தாய் மகேஸ்வரி மண்டல் கூறும்போது, “வன்முறை நடந்தபோது வீடுகளுக்குள் ஒளிந்திருந்த நாங்கள், இரவு நேரத்தில் படகு மூலம் ஆற்றைக் கடந்து தப்பித்தோம். அதன் பின்னர் பிஎஸ்எஃப் துணை ராணுவத்தினர் எங்களை இந்த முகாமுக்கு அழைத்து வந்தனர்.
நாங்கள் எங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாகி விட்டோம். நாங்கள் மீண்டும் கிராமத்துக்கு திரும்ப முடியாது. அவர்கள் மீண்டும் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் என்ன செய்வது?” என்றார் இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த காலியாசவுக் -3 பிளாக்கை சேர்ந்த அரசு அதிகாரி சுகந்தா சிக்தர் கூறும்போது, “தப்பி வந்தவர்கள் இங்கு தங்குவதற்கு ஏற்பாடு செய்துள்ளோம். மேலும் மருத்துவக் குழுவினரை அழைத்து வந்து அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்துள்ளோம். அவர்களுக்கு உணவு வழங்கி வருகிறோம்’’ என்றார்.
பணம் கொள்ளை: முர்ஷிதாபாத் வன்முறைச் சம்பவங்களின்போது ஏராளமான பொதுமக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.
கடைகள் சூறை: இதுகுறித்து பாதிக்கப்பட்ட கடை உரிமையாளர்களில் ஒருவர் கூறும்போது, “வன்முறையின்போது கடைகளை சூறையாடி அதில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டனர்.
என்னுடைய கடையிலிருந்து ரூ.13.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. மேலும் கடையிலிருந்த ரூ.7 லட்சம் முதல் 8 லட்சம் மதிப்பிலான ஃபர்னிச்சர்கள், கருவிகள் திருடிச் செல்லப்பட்டன. இதனால் எனக்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் பலரின் கடையிலிருந்தும் பணம், பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT