

வக்பு சட்ட திருத்தம் அமலான பின்பு முதல் நடவடிக்கையாக மத்திய பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தில் இயங்கி வந்த சட்டவிரோத மதரஸாவை அதன் நிர்வாகி தானாக முன்வந்து இடித்தார்.
வக்பு சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு குடியரசு தலைவரின் ஒப்புதலும் பெறப்பட்டது. இந்நிலையில் மத்தியப் பிரதேசத்தின் பன்னா மாவட்டத்தின் பி.டி.காலனியில் அரசு நிலத்தில் கட்டப்பட்ட சட்டவிரோத மதரஸா ஒன்று கடந்த 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இதை அகற்றுவதற்கு மாவட்ட நிர்வாகம் ஏற்கெனவே பலமுறை நோட்டீஸ் கொடுத்திருந்தது. ஆனால், அதன் நிர்வாகி கண்டு கொள்ளாமல் மதரஸாவை தொடர்ந்து நடத்தி வந்தார்.
தற்போது வக்பு சட்ட திருத்தம் அமலானபின்பு, சட்டவிரோத மதரஸா குறித்து மாவட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மதரஸாவுக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். இதையடுத்து மதரஸா நிர்வாகி தானாக முன்வந்து புல்டோசர் மூலம் மதரஸாவை இடித்து விட்டார். வக்பு சட்ட திருத்தம் அமலானபின் நடைபெற்ற முதல் நடவடிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது.