

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்க மாநிலத்தின் பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. முர்ஷிதாபாத்தில் நடைபெற்ற கலவரத்தில் 3 பேர் கொல்லப்பட்டனர். 150-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், துலியானில் 400-க்கும் மேற்பட்ட இந்துக்கள் உயிருக்கு பயந்து அவர்கள் வசித்து வந்த வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளனர் என்று பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி நேற்று தெரிவித்தார். இதன் மூலம், மேற்கு வங்க மாநில முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் அவரது தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் திருப்திப்படுத்தும் அரசியலில் ஈடுபடுவதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது: மத வெறியர்களுக்கு பயந்து முர்ஷிதாபாத்தின் துலியனைச் சேரந்த 400-க்கும் மேற்பட்ட இந்துக்கள் ஆற்றை கடந்து தப்பிச் சென்று மால்டாவின் பைஸ்னப் நகர், தியோனாபூர், சோவாபூர் ஜிபி, பர்லால்பூர் உயர்நிலை பள்ளியில் தஞ்சம் புகுந்துள்ளனர்.
மாவட்டத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ள மத்திய துணை ராணுவப் படைகள், மாநில காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஆகியவை இணைந்து இடம்பெயர்ந்த இந்துக்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவதை உறுதிசெய்ய வேண்டும். இந்த ஜிஹாதி பயங்கரவாதத்திலிருந்து அவர்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும். வங்காளம் பற்றி எரிகிறது. சமூகக் கட்டமைப்பு சிதைந்துவிட்டது. போதும் போதும். இவ்வாறு சுவேந்து பதிவிட்டுள்ளார்.