நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.700 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.700 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை

Published on

நேஷனல் ஹெரால்டு வழக்கில் ரூ.700 கோடி சொத்துகளை முடக்க அமலாக்கத் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.

கடந்த 1937-ம் ஆண்டில் நேருவால் தொடங்கப்பட்ட அசோசியேட்டட் ஐர்னல்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் (ஏஜேஎல்) சார்பில் நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வெளியிடப்பட்டு வந்தது. இதில் 5,000-க்கும் மேற்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பங்குதாரர்களாக இருந்தனர். கடந்த 2008-ம் ஆண்டில் நேஷனல் ஹெரால்டு மூடப்பட்டது. அப்போது காங்கிரஸ் கட்சிக்கு, ஏஜேஎல் நிறுவனம் ரூ.90 கோடி கடன்பட்டிருந்தது.

இந்த சூழலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் பங்குதாரராக உள்ள யங் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனம், ரூ.50 லட்சத்தை செலுத்தி ஏஜேஎல் நிறுவனத்தை கையகப்படுத்தியது. மீதமுள்ள ரூ.89.50 கோடி கடனை காங்கிரஸ் ரத்து செய்தது. இதன்மூலம் ஏஜேஎல் நிறுவனத்தின் ரூ.2,000 கோடி சொத்துகளை யங் இந்தியா பிரைவேட் நிறுவனம் முறைகேடாக அபகரித்திருப்பதாக அமலாக்கத் துறை குற்றம் சாட்டி உள்ளது.

இந்த சூழலில்,நேஷனல் ஹெரால்டு வழக்கில் தொடர்புடைய ரூ.700 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது. இதன்படி டெல்லி, மும்பை, லக்னோவில் உள்ள சொத்துகள் முடக்கப்பட உள்ளன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in