

கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை வழக்குகளை விரைந்து விசாரித்து தண்டனை வழங்குவதற்காக 33 சிறப்பு காவல் நிலையங்களை அமைக்க அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஷ்வரா பெங்களூருவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகாவில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதிவாகும் வழக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஆனால் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் சதவீதம் குறைவாக இருப்பது ஆய்வில் தெரியவந்தது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் 2024ம் ஆண்டுவரையில் இத்தகைய வழக்குகளில் தண்டனை விகிதம் 2.47 சதவீதமே உள்ளது. இத்தகைய வழக்குகள் பல்வேறு காரணங்களால் உடனடியாக விசாரிக்க முடியாமல் கால தாமதமாகின்றன. எனவே எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதிவாகும் வழக்குகளை விரைந்து விசாரித்து, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க அரசு முடிவெடுத்துள்ளது.
அதற்காக கர்நாடகா முழுவதும் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் பதிவாகும் வழக்குகளை விசாரிக்க பாபாசாகேப் அம்பேத்கர் பிறந்த தினமான ஏப்ரல் 14-ம் தேதி 33 சிறப்பு காவல் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.
பெங்களூருவில் 2 காவல் நிலையங்களும், இதர மாவட்டங்களில் தலா ஒரு காவல் நிலையமும் அமைய இருக்கிறது. இதன் மூலம் இத்தகைய வழக்குகள் விசாரிக்கப்படும் முறையில் மாற்றம் ஏற்பட்டு, அந்த சட்டம் கொண்டுவரப்பட்டதன் நோக்கம் நிறைவேறும் என நம்புகிறோம். இவ்வாறு பரமேஷ்வரா தெரிவித்தார்.