'வக்பு' வன்முறை | மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் கலவரத்தில் 2 பேர் உயிரிழப்பு: போலீஸ் தகவல்

'வக்பு' வன்முறை | மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் கலவரத்தில் 2 பேர் உயிரிழப்பு: போலீஸ் தகவல்

Published on

கொல்கத்தா: வக்பு திருத்த சட்டத்துக்கு எதிராக மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத்தில் உள்ள சம்சர்கங்ஜில் ஏற்பட்ட வன்முறையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்கு வங்கத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் வக்பு திருத்த சட்டத்துக்கு எதிரான போராட்டங்களுக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள வன்முறை மோதல்களால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த வன்முறை தொடர்பாக எதிர்க்கட்சியான பாஜக குற்றம்சாட்டியதைத் தொடர்ந்து, வக்பு திருத்தச் சட்டம் மேற்கு வங்கத்தில் அமல்படுத்தப்படாது என்று தெரிவித்திருக்கிறார்.

இதனிடையே முர்ஷிதாபாத்தில் வெள்ளிக்கிழமை ஏற்பட்ட கலவரம் தொடர்பாக 118 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், வன்முறையில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்" என்று தெரிவித்தார்.

கலவரம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மாநில முதல்வர் மம்தா, "ஒவ்வொரு மனித உயிரும் விலைமதிப்பற்றது, அரசியலுக்காக கலவரங்களைத் தூண்டிவிடாதீர்கள். கலவரம் செய்பவர்கள் சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கிறார்கள்.

வக்பு சட்டத்தை நாங்கள் உருவாக்கவில்லை. இந்தச் சட்டத்தை மத்திய அரசு இயற்றியது. எனவே, போராட்டத்தில் ஈடுபடுபவர்கள், தாங்கள் விரும்பும் பதிலை மத்திய அரசிடமிருந்துதான் பெற வேண்டும்.

இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம் - இந்த சட்டத்தை நாங்கள் ஆதரிக்கவில்லை. இந்தச் சட்டம் நமது மாநிலத்தில் செயல்படுத்தப்படாது. அப்படி இருக்க, இந்தக் கலவரம் எதற்கானது? கலவரத்தைத் தூண்டுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுப்போம் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நாங்கள் எந்த வன்முறைச் செயலையும் மன்னிப்பதில்லை." என்று தெரிவித்துள்ளார்.

முர்ஷிதாபாத்தில் வன்முறை தொடங்கியது எப்படி?: மேற்குவங்கத்தின் சில பகுதிகளில் வக்பு சட்டத்துக்கு எதிராக நடந்த போராட்டங்கள் பதற்றத்தை ஏற்படுத்தியது. வன்முறையாளர்கள் வாகனங்களுக்குத் தீ வைத்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கலவரக்காரர்களைக் கட்டுப்படுத்த முயன்றதில் சில போலீஸார் காயமடைந்தனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "வெள்ளிக்கிழமை தொழுகைக்கு பின்பு முஸ்லிம்கள் ஒன்று கூடி வக்பு சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் பதற்றம் ஏற்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், சம்சர்தஞ்சிலுள்ள டாக்பாங்லோவிலிருந்து சுதிர் சஜுர் மோர் இடையில் உள்ள தேசிய நெடுஞ்சாலை 12-ஐ மறித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒரு போலீஸ் வாகனத்தின் மீது கற்களை எறிந்ததில் போராட்டம் வன்முறையாக மாறியது. இந்த கலவரத்தில் 10 போலீஸார் காயம் அடைந்தனர். கட்டுக்கு அடங்காக கூட்டத்தை கட்டுப்படுத்த போலீஸார் தடி அடி நடத்த வேண்டி இருந்தது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வெடி குண்டு போன்ற பொருளை வீசியதால் போலீஸார் கண்ணீர் புகைகுண்டை பயன்படுத்த வேண்டி இருந்தது" என்று தெரிவித்தார்.

சனிக்கிழமை நடந்த வன்முறை முர்ஷிதாபாத்தின் துலியன் பகுதி வரை பரவியது. இங்கு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்தார். இதனிடையே மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்த மஜும்தார், திரிணமூல் காங்கிரஸ் அரசு முர்ஷிதாபாத்தில் சட்டத்தின் ஆட்சியை அமல்படுத்தி அமைதியை நிலைநாட்ட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in