கர்நாடக அமைச்சரவை சாதி கணக்கெடுப்பு: அறிக்கைக்கு ஒப்புதல்

கர்நாடக அமைச்சரவை சாதி கணக்கெடுப்பு: அறிக்கைக்கு ஒப்புதல்
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகாவில் கிடப்பில் போடப்பட்டிருந்த‌ சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கைக்கு மாநில அமைச்சரவை கூட்டத்தில் நேற்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.

கர்நாடகாவில் கடந்த 2015-ம் ஆண்டு சித்தராமையா முதல்வராக இருந்தபோது சாதிவாரி கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதற்கு அப்போது எதிர்ப்பு எழுந்ததால் அதன் விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் கடந்த நவம்பரில் பிஹார் மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்கள் வெளியிடப்பட்டதை தொடர்ந்து, காங்கிரஸ் மேலிடம் அனைத்து மாநிலங்களிலும் அத்தகைய கணக்கெடுப்பு நடத்தி அதன் விவரங்களை வெளியிட வேண்டும் என வலியுறுத்தியது.

இதையடுத்து கர்நாடக முதல்வர் சித்தராமையா, விரைவில் சாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட நடவடிக்கை மேற்கொண்டார். சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக ஆலோசிப்பதற்காக நேற்று பெங்களூருவில் சித்தராமையா தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது சாதிவாரி கணக்கெடுப்பு (சமூக, பொருளாதார மற்றும் கல்வி கணக்கெடுப்பு) அறிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட‌து.

அந்த அறிக்கையில் இடம்பெற்றுள்ள கல்வி, பொருளாதார, வேலை வாய்ப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் உள்ளிட்டவை குறித்து அமைச்சரவையில் விரிவாக விவாதிக்கப்பட்டது. பின்னர் அமைச்சரவையில் பங்கேற்ற அனைத்து அமைச்சர்களும் ஒப்புதல் அளித்ததாக அறிவிக்கப்பட்டது. அதேவேளையில் அமைச்சர்கள் எஸ்.எஸ். மல்லிகார்ஜுன், லட்சுமி ஹெப்பால்கர், எம்.சி. சுதாகர்,கே. வெங்கடேஷ், ஆர்.பி. திம்மாபூர், மது பங்காரப்பா ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல்கூறும்போது, ''அமைச்சரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் விவரங்களை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். அமைச்சர்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. வரும் 17-ம் தேதி சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையின் விவரங்கள் குறித்து சிறப்புக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது''என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in