Published : 10 Apr 2025 07:31 AM
Last Updated : 10 Apr 2025 07:31 AM

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் நவ்கார் மகாமந்திரத்தை உச்சரித்த பிரதமர் மோடி

மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ‘நவ்கார் மகாமந்த்ரா திவஸ்’ நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை தொடங்கி வைத்தார். படம்: பிடிஐ

புதுடெல்லி: மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், நவ்கார் மகாமந்திரத்தை பிரதமர் மோடி உள்ளிட்டோர் உச்சரித்தனர். இந்தியா உட்பட 108 நாடுகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர்.

சமண மதத்தின் 24-வது தீர்த்தங்கரரான மகாவீரரின் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ‘நவ்கார் மகாமந்த்ரா திவஸ்’ நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலையில் தொடங்கி வைத்தார். ஜெயின் இண்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் (JITO) சார்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தியாவில் உள்ள 6 ஆயிரம் பகுதிகள் உட்பட 108 நாடுகளில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் காணொலி மூலம் லட்சக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது சரியாக 8.27 மணிக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட அனைவரும் இணைந்து நவ்கார் மகாமந்திரத்தை உச்சரித்தனர்.

உலக அமைதி, நேர்மறை மற்றும் ஒற்றுமை ஆகியவற்றின் சக்தி வாய்ந்த அதிர்வுகளை உருவாக்கும் வகையில் இந்த கூட்டுப் பிரார்த்தனை உலகம் முழுவதும் எதிரொலித்தது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

நவ்கார் மகாமந்திரம் என்பது வெறும் மந்திரம் அல்ல. இது வெறும் ஆன்மிகம் மட்டுமல்ல, எங்கள் நம்பிக்கையின் மையம். இது சுயநலத்திலிருந்து சமூக நலத்துக்கான பாதையை அனைவருக்கும் காட்டுகிறது.

நவ்கார் மந்திரம் 'உங்களை நம்புங்கள்' என்று கூறுகிறது. எதிரி வெளியில் இல்லை, நமக்குள்ளேயே இருக்கிறான். எதிர்மறை சிந்தனை, நேர்மையின்மை, சுயநலம் ஆகியவை நம் எதிரிகள். அவர்களை வெல்வதே உண்மையான வெற்றி. சமண மதம் நம்மை நாமே வெற்றி கொள்ளத் தூண்டுகிறது.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் சமண மதத்தின் தாக்கத்தைப் பார்க்க முடியும். இதில் தீர்த்தங்கரரின் சிலை மற்றும் அரசியலமைப்பு மண்டபத்தின் கூரையில் மகாவீரரின் ஓவியம் ஆகியவை உள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக, பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், “வாருங்கள் நாம் அனைவரும் இணைந்து 8.27 மணிக்கு நவ்கார் மகாமந்திரத்தை உச்சரிப்போம். ஒவ்வொரு குரலும் அமைதி, வலிமை மற்றும் நல்லிணக்கத்தை கொண்டுவரட்டும். சகோதரத்துவம் மற்றும் ஒற்றுமையின் உணர்வை மேம்படுத்த நாம் அனைவரும் ஒன்றிணைவோம்" என பதிவிட்டிருந்தார்.

சென்னையில்.. ஜெயின் இண்டர்நேஷனல் டிரேட் ஆர்கனைசேஷன் (JITO) அமைப்பின் சென்னை பிரிவு சார்பில், சென்னை செயின்ட் ஜார்ஜ் பள்ளியில் உள்ள விங்ஸ் கருத்தரங்கு மையத்தில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் புகழ்பெற்ற பாடகி அனுராதா பொட்வால் தனது மெல்லிசைக் குரலால் பாடினார். இதில் பங்கேற்ற ஆண்கள் வெண்மை நிற ஆடைகளையும், பெண்கள் சிவப்பு நிற ஆடைகளையும் அணிந்திருந்தனர். இந்த அரிய நிகழ்வு நேரலையில் ஒளிபரப்பானது.

சென்னை நிகழ்வில் நடிகைகள் ஜெயப்பிரதா, ஸ்ருதி ஹாசன், ரூபாலி கங்குலி மற்றும் அகில இந்திய தீவிரவாத எதிர்ப்பு முன்னணியின் தலைவர் மணீந்தர்ஜீத் சிங் பிட்டா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x