சத்தீஸ்கரில் 22 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண்டர்

சத்தீஸ்கரில் 22 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படையினரிடம் சரண்டர்
Updated on
1 min read

ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பீஜப்பூர் மாவட்டத்தில் தலைக்கு ரூ.26 லட்சம் விலை வைக்கப்பட்ட 4 பேர் உட்பட மொத்தம் 22 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படையினரின் முன்பாக ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரணடைந்தனர்.

இதுகுறித்து பீஜப்பூர் காவல் துறை கண்காணிப்பாளர் ஜிதேந்திர குமார் யாதவ் நேற்று கூறியதாவது: மாநில அரசின் "உங்களது நல்ல கிராமம்" என்ற திட்டமானது பாதுகாப்புப் படை முகாம்கள் அருகிலுள்ள தொலைதூர பகுதிகளில் வளர்ச்சியை மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டது.

இதன் மூலம் ஏராளமான மாவோயிஸ்ட்கள் சரணடைய ஊக்குவிக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, 6 பெண்கள் உட்பட 22 மாவோயிட்கள் தங்களது ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு பாதுகாப்பு படையினரிடம் சரண் அடைந்துள்ளனர். இதில், 4 பேரின் தலைக்கு அரசு ரூ.26 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தது.

மாவோயிஸ்ட் சித்தாந்தத்தின் மீதான ஏமாற்றம், உட்பிளவுகள் மற்றும் இயக்கத்துக்குள் மனிதாபிமானமற்ற நடைமுறைகள் ஆகியவற்றை சுட்டிக்காட்டி அவர்கள் சரணடைந்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் தலா ரூ.50,000 உடனடியாக வழங்கப்படுவதுடன், மாநில புனர்வாழ்வு திட்டத்தின் பயன்களையும் பெறுவார்கள்.

இவ்வாறு ஜிதேந்திர குமார் தெரிவித்தார்.

இந்தாண்டில் இதுவரையில் பீஜப்பூர் மாவட்டத்தில் 179 மாவோயிட்கள் சரணடைந்துள்ளனர். மேலும், இந்த காலகட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய தனித்தனியான தேடுதல் வேட்டைகளில் 83 மாவோயிஸ்ட்கள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன் 172 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in